×

பு.புளியம்பட்டி அருகே மூதாட்டியிடம் பில்லி சூனியம் நீக்கி தருவதாக நகை, ரூ.13 லட்சம் மோசடி: 2 பேர் கைது

*போலீசிடம் தப்பிக்க சுருட்டிய பணத்தில் கார் வாங்கி ஊர் சுற்றியது அம்பலம்

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தபோவனம் பகுதியை சேர்ந்தவர் ருக்குமணி (61). இவருக்கு 2 மகள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்து வரும் நிலையில் மூதாட்டி ருக்குமணி தனியே வசித்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவரது வீட்டிற்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியிடம் உங்களது மகன், மகளது உடம்பில் ஆவி புகுந்துள்ளதாகவும், பில்லி சூனியத்தை ஏவி விட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அதை நீக்க வேண்டும் என்றால் பூஜை மூலம் பரிகாரம் செய்ய ரூ.20 லட்சம் செலவாகும், மேலும் உங்களது வீட்டில் உள்ள தங்க நகைகளை பரிகாரம் செய்ய தர வேண்டும் என பயமுறுத்தி உள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மூதாட்டி பணம் மற்றும் தங்க நகைகளை தருவதாக ஒப்புக்கொண்டு நான்கு தவணைகளாக ரூ.13 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த தாலி, தங்கச்செயின் என 5.5 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் கொடுத்துள்ளார். பணம், தங்க நகைகளை கொடுத்தும் பரிகாரம் எதுவும் செய்யாததால் சந்தேகமடைந்த ருக்குமணி புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்த நிலையில் சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் நாமக்கல் மாவட்டம் காட்டுவேலாம் பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த குழந்தைவேல் (35), வீரமணி (28) ஆகிய இருவரையும் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

இதில், இருவரும் சேர்ந்து மூதாட்டியிடம் பில்லி சூனியம் நீக்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை சுருட்டியது தெரியவந்தது. மேலும் சுருட்டிய பணத்தில் ரூ.5 லட்சத்திற்கு அடமானம் வைத்திருந்த வீட்டு பத்திரத்தை மீட்டதும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள கார் வாங்கியதும், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க காரில் ஊர் ஊராக சுற்றியதும் தெரிய வந்தது.

மோசடி நபர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகள், செல்போன்கள், கார் மற்றும் ரூ.5 லட்சம் கொடுத்து மீட்ட வீட்டு பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூதாட்டியிடம் ரூ.13 லட்சம் ரொக்க பணம் பெற்று ஏமாற்றிய நிலையில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள தொகை குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தனியாக வசித்த மூதாட்டியிடம் பில்லி சூனியம் நீக்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் ரொக்கம், 5.5 பவுன் தங்க நகை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பு.புளியம்பட்டி அருகே மூதாட்டியிடம் பில்லி சூனியம் நீக்கி தருவதாக நகை, ரூ.13 லட்சம் மோசடி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Billy ,Buliampatty ,Ambalam Satyamangalam ,Rukumani ,Tabowanam ,Bhavanisagar, Erode district ,Jewel ,Puliampatty ,
× RELATED இலங்கையிலிருந்து கடத்தி வந்த ரூ.8...