×

ஒலிம்பியாட் போட்டியில் சிறந்து விளங்குவோருக்கு ஜேஇஇ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை: சென்னை ஐஐடி அறிவிப்பு

சென்னை: தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோருக்கு ஜேஇஇ தேர்வு இல்லாமல் இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. அறிவியல் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோர்’ (Science Olympiad Excellence-scop) என்ற இப்பிரிவிற்கு 2025-26ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விளையாட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை, நுண்கலை மற்றும் கலாச்சாரத்திற்கான சிறப்பு மாணவர் சேர்க்கை ஆகியவற்றை போலவே அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு (ஸ்கோப்) மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உள்பட தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது உள்ளிட்ட இதர தகுதிகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டுகளில் எந்தவொரு ஐஐடி-யிலும் மாணவராக சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது. முதல் பேட்ச்-க்கான விண்ணப்ப பதிவு வருகிற ஜூன் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை < https://ugadmissions.iitm.ac.in/scope > என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “உலகின் மிகப் பெரிய புதிர்கள் பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் தீர்க்கப்படுவதில்லை. மாறாக அவற்றை துண்டுதுண்டாகப் பிரித்து, எதிர்கால சந்ததியினருக்கு புதிய அதிசயங்களை உருவாக்கத் துணிபவர்களால்தான் தீர்க்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தோடு, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் பெரிதும் விரும்பும் இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கையை வழங்குவதன் மூலம் ஐஐடி மெட்ராஸ் புதியதொரு பயணத்தைத் தொடங்குகிறது. நாடு முழுவதும் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

The post ஒலிம்பியாட் போட்டியில் சிறந்து விளங்குவோருக்கு ஜேஇஇ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை: சென்னை ஐஐடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : JEE ,IIT Madras ,Chennai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...