*அலங்கார கற்கள் உடைக்கப்பட்ட தெருக்களில் விபத்து அபாயம்
அஞ்சுகிராமம் : நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டு ஒன்றிய அரசால் அம்ருத் 2.0 திட்டம் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்குள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓராண்டு பணி நிறைவு அடிப்படையில் அம்ரூத் 2.0 திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.13.68 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த பணிகளை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஓய்வு பெற்ற பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு இந்தப் பணிகளை கண்காணித்தும், நிறைவடைந்த பணிகளை அளவீடு செய்து பில் தொகைக்கு அனுமதி அளிக்கும் பணியை செய்து வந்தது.இந்நிலையில், கடந்த 2024 டிசம்பருடன் முடிவடைய வேண்டிய பணிகள் இன்று வரை முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அஞ்சுகிராமம் பேரூராட்சி பொதுமக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
இது குறித்து அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் ஜோஸ் திவாகர் கூறியதாவது: அஞ்சுகிராமத்தில் அம்ரூத் 2.0 பணிகள் முறைப்படி கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் 60 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மீதி பணிகள் அப்படியே உள்ளன. 90 சதவீத குழய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வீட்டுக்கு கூட இன்னும் இணைப்புகள் வழங்கப்படவில்லை.
தனியார் நிறுவனத்தின் பணிகளை மேற்பார்வை செய்து பணிகள் முடிந்த இடங்களை அளவீடு செய்து கணக்கிடுவது, பில் தொகை பாஸ் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற பொறியாளர்கள் குழு முழுமையாக ஈடுபடாததால் முழுமையாக பணி செய்யும் ஒப்பந்ததாரருக்கு பணம் சென்றடையவில்லை.
மேலும் ஒரு வருடத்தில் முழுதொகையும் வழங்கப்பட்டு பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் ரூ.13.68 கோடியில் இதுவரை ரூ.3 கோடி மட்டுமே தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்படாததால் அந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனால் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட பெரும்பாலான தெருக்களில் குழாய் பதிப்பதற்காக பேவர் பிளாக் கற்கள் உடைக்கப்பட்டு பணிகள் நடைபெறாததால் அவைகள் மூடப்படாமல் கடந்த 9 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தெருக்களில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டு காயம் அடைந்து வருகின்றனர்.
மேலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுக்காக நிறைவேற்றப்படும் சாலை பணிகள், கால்வாய் பணிகள், குப்பை அள்ளும் பணிகள், தூய்மைப் பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியவில்லை. பல இடங்களில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனாால் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அம்ருத் 2.0 பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முதல்வருக்கு மனு
இது குறித்து அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோவிடம் கேட்டபோது: அவர் கூறியதாவது, அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப் பணிகள் ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தனியார் நிர்வாகத்திடம் கேட்ட போது, பொறியாளர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்றும், பணி மேற்பார்வை செய்வதில்லை என்றும், கடந்த அக்டோபர் 2024க்கு பிறகு ரூ.2 கோடி அளவில் முடிவுற்ற பணிகளுக்கும், நிறைவு பெறும் நிலையில் உள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளுக்கும் இதுவரை பில் எழுத மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
அம்ரூத் 2.0 பணிகள் சரியாக நடைபெறாத நிலை ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோருக்கு நேரடியாக புகார் மனு அளித்துள்ளேன். மேலும், பேரூராட்சிகள் இயக்குனர், தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
The post அஞ்சுகிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட அம்ரூத் திட்ட பணிகளால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.
