×

இந்தியா-திபெத் எல்லையில் பயங்கரம் இமயமலையில் பனிச்சரிவு 57 பேர் உயிருடன் புதைந்தனர்: 32 பேர் மீட்பு:25 பேர் கதி என்ன?


டேராடூன்: இந்தியா- திபெத் எல்லையில் இமயமலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 32 பேர் மீட்கப்பட்டனர். மீதம் உள்ள 25 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இமயமலையில் உள்ள இந்தியாவின் கடைசி எல்லை வரை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் இந்தியா-திபெத் எல்லையில் உள்ள கடைசி கிராமமான மானாவில் உள்ள எல்லை சாலைகளில் ராணுவ நகர்வுக்காக சாலைகளை தயார் செய்ய, எல்லை சாலைகள் அமைப்பு என்னும் ராணுவ பிரிவை சேர்ந்த 57 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பத்ரிநாத் பகுதியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள மானா கிராமம் தரைமட்டத்தில் இருந்து 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. சுமார் 7 அடி உயரத்திற்கு இதனால் பனிப்பொழிவு உள்ளது. இந்த பகுதியில் சாலை அமைக்கும் வேலை நடந்தது. குறிப்பாக மானா மற்றும் பத்ரிநாத் இடையே எல்லையோர சாலைகளை உருவாக்க நடந்த இந்த பணியில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள முகாமில் தங்கியிருந்தனர்.

நேற்று காலை 7.15 மணி அளவில் திடீரென மிகப்பெரிய அளவு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 57 தொழிலாளர்களும் உயிருடன் புதைந்தனர்.  இதையடுத்து உடனடியாக மீட்பு படையை சேர்ந்த 100 பேர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு சென்றனர். பனிக்குவியலுக்கு இடையே சிக்கித்தவித்த 32 ஊழியர்களை மீட்டனர். அவர்கள் மானாவில் உள்ள ஐடிபிபி முகாமிற்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். மீதம் உள்ள 25 பேரை மீட்க முடியவில்லை.

மேலும் இரவு நேரம் ஆனதால் கூடுதல் பனிப்ெபாழிவு அங்கு ஏற்பட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீட்பு பணி நடக்கும் என்று தெரிகிறது. மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்களை அங்கு கொண்டு செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு மானா பகுதி முழுவதும் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. மேலும் நேற்று இரவு மீட்பு பணி நடந்த போது கூட இரண்டு முறை பனிச்சரிவு ஏற்பட்டது.

இதனால் பெரும் பரபரப்பு உருவாகி உள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வு செயலர் வினோத் குமார் சுமன் கூறுகையில்,’ 6 முதல் 7 அடி வரை உள்ள பனியில் ஊழியர்கள் புதையுண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்றார். இந்த மீட்பு பணிகளை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முடுக்கி விட்டுள்ளனர். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமியும் மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறார்.

* எச்சரிக்கையை மீறியது ஏன்?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி, உத்தர்காஷி, ருத்ரபிரயாக், பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள இடங்களுக்கு நேற்றுமுன்தினம் மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கையை சண்டிகரில் உள்ள ராணுவ ஜியோ இன்பர்மேடிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் விடுவித்தது.

மேலும் டேராடூனில் உள்ள வானிலை அலுவலகம் இந்த மாவட்டங்களில் 3,500 மீட்டர் மற்றும் அதற்கு மேல் அமைந்துள்ள இடங்களில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரித்தது. இங்குள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் இதுகுறித்து அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும் மானா முகாமில் ஊழியர்கள் தங்கியதால் அவர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

The post இந்தியா-திபெத் எல்லையில் பயங்கரம் இமயமலையில் பனிச்சரிவு 57 பேர் உயிருடன் புதைந்தனர்: 32 பேர் மீட்பு:25 பேர் கதி என்ன? appeared first on Dinakaran.

Tags : Avalanche in ,Himalayas ,India-Tibet border ,Dehradun ,India- ,Tibet ,India ,Himalayas… ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...