மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.
அப்போது கலெக்டர் மகாபாரதி பேசியதாவது: சீர்காழியில் கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமியை, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையே தப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
எனக்கு கிடைத்த தகவலின்படி அந்த குழந்தை, சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
*கலெக்டர் அதிரடி மாற்றம்
மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி பேச்சு சர்ச்சையான நிலையில், அவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில், ‘ஈரோடு மாவட்டம், மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பணியிடமாறுதல் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக மகாபாரதிக்கு பதிலாக நியமனம் செய்யப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post 3 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை மயிலாடுதுறை கலெக்டர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.
