×

உபியில் ஜன.13 முதல் நடந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு: இதுவரை 63 கோடி பேர் புனித நீராடினர்

பிரயாக்ராஜ்: உபியில் நடந்து வந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்று வரை 63 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மூன்று நதிகள் சங்கமிக்கும் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா ஜன.13ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து புனித நீராடினர். நேற்று வரை மகாகும்பமேளாவில் 63 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது.

இன்று மகாசிவராத்திரியுடன் மகாகும்பமேளா நிறைவுபெறுகிறது. இன்று பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் புனித நீராட வருவார்கள் என்பதால் உபி அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நேற்று மாலை 4 மணி முதல் மகாகும்பமேளா பகுதியும், மாலை 6 மணி முதல் பிரயாக்ராஜ் பகுதியும் வாகனங்கள் இல்லாத பகுதியாக மாற்றப்பட்டது.

இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராட திரள்வார்கள் என்பதாலும், மகாகும்பமேளாவின் கடைசி நாள் என்பதாலும் பக்தர்கள் விரைந்து வந்து புனித நீராடிவிட்டு செல்ல வசதியாக இந்த கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று புனித நீராட வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட வழியாக வரும் பக்தர்கள் அந்த பகுதியிலேயே புனித நீராடி விட்டு விரைந்து செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

* 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்ப மேளா கடந்த ஜன.13ம் தேதி துவங்கியது.

* கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

* இது வரை 63 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

* மகா சிவராத்திரியான இன்றுடன் மகா கும்பமேளா நிறைவு பெறுகிறது.

The post உபியில் ஜன.13 முதல் நடந்த மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு: இதுவரை 63 கோடி பேர் புனித நீராடினர் appeared first on Dinakaran.

Tags : Mahakumbh Mela ,UP ,Prayagraj ,Triveni Sangam ,Ganga ,Yamuna ,Saraswati ,Uttar Pradesh ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!