- மோடி
- பொங்கல்
- தெற்கு தொகுதி
- சேவா தீர்த்
- சுதந்திர
- புது தில்லி
- புதிய நாடாளுமன்றம்
- தில்லி
- துணை ஜனாதிபதி
புதுடெல்லி: சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக பிரதமர் அலுவலகம் இடம் மாறுகிறது. சவுத் பிளாக்கில் இருந்து பொங்கல் தினத்தில் ‘சேவா தீர்த்’ பகுதிக்கு பிரதமர் மோடி மாறுகிறார். டெல்லியில் புதிய நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு புதிய இல்லங்கள், பொதுவான மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. தூர ராஜபாதையை மறுசீரமைக்கும் பணிகள் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டம் அடிப்படையில் நடந்துள்ளன. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.862 கோடி செலவிலும் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ ரூ. 477 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட்டன. இதில் பல பணிகள் நடந்து முடிந்துள்ளன. அதை தொடர்ந்து பிரதமர் அலுவலகமும் தற்போது புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து பிரதமர் அலுவலகம் சவுத் பிளாக்கில் செயல்பட்டு வந்தது. அனைத்து பிரதமர்களும் அங்கு இருந்து தான் பணியாற்றி வந்தனர். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் அலுவலகம் தற்போது ‘சேவா தீர்த்’(சேவைக்கான புனித தலம்) என்ற பெயரில் அமைக்கப்பட்டது. அந்த பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இதையடுத்து பிரதமர் மோடியின் புதிய அலுவலகம் தயாராகிவிட்டது.
அந்த வளாகத்திற்கு பிரதமர் மோடி இந்த வாரமே மாறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இடமாற்றம் ஜனவரி 14 அன்று மகர சங்கராந்தி(பொங்கல்) பண்டிகையையொட்டி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகம் பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் தனித்தனி கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் அலுவலகம் அமையவிருக்கும் புதிய கட்டிடத்திற்கு ‘சேவா தீர்த் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நவீன பணிச்சூழல்களையும், பிரம்மாண்டமான விழா அறைகளையும் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் இந்த இடமாற்றம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. ஏனெனில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து செயல்பட்டு வந்த சவுத் பிளாக்கில் இருந்து புதிய இடத்திற்கு மாறுகிறது.
பிரதமர் அலுவலகம் முழுமையாக ‘சேவா தீர்த்’ பகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு, சவுத் மற்றும் நார்த் பிளாக் கட்டிடங்கள் ‘யுகே யுகீன் பாரத் சங்கராலயா’ என்ற பொது அருங்காட்சியகமாக மாற்றப்படும். அருங்காட்சியகத்தின் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக பிரான்சின் அருங்காட்சியக மேம்பாட்டு நிறுவனத்துடன் இதற்காக ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
* முழு ‘சேவா தீர்த்) வளாகமும் எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் என்றும் அழைக்கப்படுகிறது.
* இந்த பகுதி எல்மற்றும்டி நிறுவனத்தால் ரூ. 1,189 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
* இது 2,26,203 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
* பிரதமரின் புதிய அதிகாரப்பூர்வ இல்லம் தற்போதைக்கு \”எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் பகுதி 2 \” என்று பெயரிடப்பட்டு, அருகிலேயே கட்டப்பட்டு வருகிறது.
