திருவொற்றியூர், பிப்.24: கடலூர் மாவட்டம், கீரிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (54), லாரி டிரைவர். இவர், நேற்று எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாதவரத்திற்கு செல்ல வேண்டிய கன்டெய்னரை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். எண்ணூர் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தறிகெட்டு ஓடிய லாரி, சாலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி, நிற்காமல் சாலை ஓரத்தில் இருந்த தெரு விளக்கு கம்பத்தின் மீதும் மோதி, அங்கிருந்த பள்ளத்தில் தொங்கியபடி இருந்தது.
இதில், லாரியை ஒட்டி வந்த ரமேஷ், இருக்கையில் இருந்து கீழே விழுந்ததில், லாரி சக்கரத்தில் சிக்கியதால், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சாலையோர பள்ளத்தில் தொங்கியபடி இருந்த லாரியை கிரேன் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்தனர். லாரி ஓட்டுநர் இரு தினங்களாக தூங்காமல் லாரி ஓட்டியதால் தூக்க கலக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
The post எண்ணூர் விரைவு சாலையில் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு: கீழே விழுந்த டிரைவர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.
