×

திடீரென கட்சி ஆரம்பித்து நாட்டை ஆள வேண்டும் என்று எண்ணிய கட்சி அல்ல திமுக: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

மணலி, டிச.25: சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மணலி, சின்ன சேக்காடு பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில மீனவர் அணி துணைத்தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலிவுற்ற பெண்கள் 15 பேருக்கு தையல் இயந்திரம், 1000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: நூறாண்டுகள் கடந்து ஏழை தாய்மார்களுக்கு பாடுபட்ட கட்சி திமுக. அரசியல் பேசலாம், நாடாள துடிக்கலாம். திமுக பட்ட சிரமத்தை போல கட்சி வளர்ச்சிக்கு உழைத்த தலைவர் யார்? சினிமாவில் மின்னுகின்ற நட்சத்திரம் எல்லாம் உதய சூரியன் ஆகிட முடியாது. ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் வானத்தில் உதயசூரியன், உதயசூரியன் தான். ஆரிய, திராவிட போராட்டம் தமிழ்நாட்டில் என்றைக்கும் உண்டு. திமுக என்பது தீரர்களின் கூடாரம். திடீரென கட்சி ஆரம்பித்து நாட்டை ஆள வேண்டும் என்று எண்ணிய கட்சி அல்ல திமுக. 18 ஆண்டு காலம் கட்சி துவங்கி, மக்களுக்கு உழைத்து உழைத்து, போராடியது. நாளை தேர்தல் வந்தாலும் ஏழாவது முறையாக திமுக ஆட்சி என்பதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,Minister ,Kovi ,Chezhiyan ,Manali ,Thiruvottriyur Central ,Chennai North East district ,Chinna Sekkadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்