பூந்தமல்லி, டிச.24: பூந்தமல்லி தொகுதியில் புதிய வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 19ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. எஸ்ஐஆருக்கு பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் இருந்து 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் உள்ள அகரமேல் ஊராட்சியில் உள்ள 4 பூத்களில் 3839 வாக்குகள் இருப்பதாக பட்டியல் வெளியானது. இதற்கு முன்பு 3997 வாக்குகள் இருந்ததாகவும் தற்போது 3839 வாக்குகள் இருப்பதாக பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மொத்தமுள்ள 3839 வாக்குகளில் இறந்தவர்களின் பெயர், ஒரே பெயரில் இரண்டு முறை பதிவு என 100 க்கும் மேற்பட்டோரின் பதிவுகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுகையில்: ‘சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஏகாம்பரம், சாரதாம்மாள், மணி, நடராஜன், மோகன சுந்தரம், அப்பு, கணேசன், நந்தகோபால், புருஷோத்தமன், லட்சுமி, தர்மராஜ் என நீண்ட பட்டியல் உள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் மீண்டும் எப்படி வந்தது எனவும் இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை. உடனடியாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக இந்த பகுதியில் தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் பணிகள் முறையாக நடத்தவில்லை எனவும் அந்த நேரத்தில் வீடுகளில் ஆட்கள் இல்லாத நிலையில் அதிகாரிகளே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
