பவானி, பிப். 20: அம்மாபேட்டை அருகே உள்ள பி.கே.புதூர், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் விஜயகுமார் (32). இவர் தனது மனைவி ரெஹானா பானு மற்றும் குடும்பத்தினருடன் ஓலையின் மேற்பகுதியில் தகரம் வேய்ந்த குடிசையில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ரெஹானா பானு, சமையல் வேலைகளை முடித்து விட்டு வீட்டின் முன் உள்ள இரும்பு கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் மின் இணைப்பு இல்லாததால் விளக்கு பற்ற வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் வீட்டின் ஓலையில் தீப்பற்றி உள்ளது.
தீ மளமளவென பரவியதில் வீடு முழுவதும் பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அப்பகுதியினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதில், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.
