ஈரோடு, ஜன.3: ஈரோடு கொங்கலம்மன் கோயில் அருகே சுல்தான்பேட்டை வீதி உள்ளது. இந்த வீதியில் உள்ள வணிக வளாகத்தில் பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அட்டை பெட்டிகளில் தீப்பிடித்ததால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சி அளித்தது. இந்த தீ விபத்து அணைக்கப்படாத சிகரெட் அல்லது பீடி துண்டினால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
