
புழல்: புழல், காந்தி பிரதான சாலையில் அமைந்துள்ள திருமூலநாதர் கோயிலின் சுற்றுச்சுவர் கடந்த மழையின்போது, இடிந்து விழுந்த நிலையில், தற்போது புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் குடியிருப்பு சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புழல், காந்தி பிரதான சாலையில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் சொர்ணாம்பிகை உடனுறை திருமூலநாதர் கோயில் அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் பழை வாய்ந்த இக்கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த கோயிலுக்கு புழல், செங்குன்றம், மாதவரம், மணலி, வியாசர்பாடி உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் கோயிலின் பின்புறத்தில் 15 அடி உயரம் உள்ள சுற்றுச்சுவர் சுமார் 120 அடி தூரத்துக்கு இடிந்து விழுந்து தரைமட்டமானது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவர் தற்போது இடிந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கோயிலின் அறங்காவலர் குழுவினர், உரிய நடவடிக்கை எடுத்து இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு, புதிதாக சுற்றுசுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, செய்தி படத்துடன் கடந்த 19ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன், எதிரொலியாக புழல் பாலாஜி நகர் குடியிருப்பு சங்கத்தின் சார்பில், இடிந்து விழுந்த கோயிலின் சுற்றுச்சுவரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த, கோயிலின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள புழல் பாலாஜி நகர் குடியிருப்பு சங்கத்துக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், பக்தர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post கடந்த மழையின்போது இடிந்து விழுந்த திருமூலநாதர் கோயிலின் சுற்றுச்சுவர் சீரமைப்பு appeared first on Dinakaran.
