×

திருவண்ணாமலையில் தை பூசத்தையொட்டி ஈசான்ய குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தைபூசத்தையொட்டி இன்று ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களின் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி ஆடிப்பூர உற்சவத்தின்போது சிவகங்கை தீர்த்தக்குளத்திலும், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது பிரம்ம தீர்த்தக்குளத்திலும், சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நாட்களில் பிரம்ம தீர்த்தக்குளத்திலும், தைப்பூச விழாவின்போது கிரிவல பாதையில் உள்ள ஈசானிய குளத்திலும், தட்சிணாயனம், உத்ராயண பிரம்மோற்சவங்களின்போது தாமரைக்குளம் மற்றும் ஐயங்குளத்திலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆண்டுதோறும் தை மாதம் 5ம்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமி நாளில் கலசப்பாக்கம் அருகே உள்ள செய்யாற்றிலும், மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியிலும் தீர்த்தவாரி நடைபெறும்.

அதன்படி இந்தாண்டு தை பூசத்தையொட்டி இன்று ஈசான்ய குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் காலையிலேயே கிரிவலம் சென்றனர்.

பின்னர் தைப்பூச தீர்த்தவாரிக்காக காலை 11.30 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அப்போது சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளம் முழங்க ஈசான்ய குளக்கரையில் எழுந்தருளினார். மதியம் 12 மணியளவில் சூலநாதருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்றிரவு கிரிவலம்;
தை மாத பவுர்ணமி இன்றிரவு 7.51 மணிக்கு தொடங்கி நாளை இரவு 8.16க்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று மதியத்திற்கு பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. பக்தர்களின் வசதிக்காக வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சென்னை, காட்பாடி, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இன்றிரவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

The post திருவண்ணாமலையில் தை பூசத்தையொட்டி ஈசான்ய குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Tirthawari ,Thai Busathaioti Iesanya Pond ,Tiruvannamalai ,Tirthwari ,Isanya Pond ,Annamalaiyar Temple ,Thirthwari ,Sivaganga ,Theerthakul ,Karthikai Dipatharutih ,Annamalaiyar Tirthavari ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...