×

பழநியில் இன்று தைப்பூசத் தேரோட்டம்: 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

பழநி: பழநியில் தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 5 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்தாண்டு திருவிழா கடந்த 5ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி காலையில் தந்தப் பல்லக்கு, இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது.

இரவு 9.30 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி, ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை 4.45 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியாளில் சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரேற்றம் நடந்தது. மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களும், வாகனங்களில் வரும் பக்தர்களும் அரோகரா கோஷமிட்டு வருகின்றனர்.

பக்தர்கள் அலகு குத்தி, காவடி சுமந்து, பறவைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் ஆகியவை காண்போரை பரவசமடைய செய்கிறது. வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்கின்றனர். நகர் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. தைப்பூசத் தேரோட்டத்தையொட்டி 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூர்:இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்தபெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார்.

தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகர் பக்தி பாடல்களை பாடி, ஆடியும் வந்தனர். இவர்கள் அனைவருமே நேற்று இரவு முதலே திருக்கோயில் வளாகத்தில் தங்கி, இன்று அதிகாலை நடைதிறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.இதேபோல் தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

பழநியில் ஏன் ரொம்ப விசேஷம்: முருகன், தாய் தந்தையிடம் கோபித்துக்கொண்டு, பழனி மலையில் வீற்றிருக்கும் போது, தாராசுரன் என்னும் கொடிய அரக்கன் துன்பம் கொடுத்து வந்ததாகவும், அதனால் கோபம் கொண்ட முருகன், தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையாளிடமிருந்து வேலையும் பெற்று, தாராசுரனை வென்று வீழ்த்திய நாள்தான் தைப் பூசம் என சொல்லப்படுகிறது. தாராசுரனை, முருகன் பழனியில்தான் வீழ்த்தினார் என்பதாலேயே அறுபடைவீடுகளில், மற்ற இடங்களை விட பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

The post பழநியில் இன்று தைப்பூசத் தேரோட்டம்: 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Thaipusam chariot procession ,Palani ,Thandayuthabani Swamy hill temple ,Palani, Dindigul district ,Lord ,Muruga ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...