கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள இரும்பு உருக்காலையில் இரும்பு தாது சிதறியதில் வாலிபர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர். புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 60 தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள இரும்பு உருக்காலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வடமாநில இளைஞர்கள் நள்ளிரவில் உருக்காலையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பர்னஸில் இருந்து இரும்புத்தாது சூடாக சிதறியதில் அருகே பணியில் ஈடுபட்ட பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிப்காட் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சாயல் (24), பீகாரைச் சேர்ந்த நகேந்தர் (25) ஆகிய இருவருக்கும் 40% தீக்காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் பசில் ரகுமான் (28), பங்கஜ் குமார் (18), பிஹாட்ராம் (24), தில்காஷ் (18) ஆகியோரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சாயல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
The post கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்காலையில் இரும்பு தாது சிதறி வடமாநில வாலிபர் பலி: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
