சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார், அதன்பிறகு அவரை காணவில்லை. இதற்கிடையில் தர்மபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருத்த வழக்கில் அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி அர்ஜூனனின் மகன் சதிஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த அர்ஜூனனின் இறப்பு சான்றிதழ் சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதால், அவர் இயற்கையாக மரணமடைந்தாரா அல்லது காவல்துறையினர் தாக்கி மரணமடைந்தாரா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் ஸ்டாலின் அமிமன்யு ஆஜராகி, ‘30 ஆண்டுகளுக்கு பிறகு இதுக்குறித்து விசாரணை நடத்த முடியாது. காவல்துறையினர் தாக்கி தான் மரணமடைந்தார் என்பது தொடர்பாக எந்த புகாரும் இல்லை. இது தொடர்பாக எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை’என்றார். அரசு தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி 30 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுனனின் மரணம் குறித்து விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
