வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை பகுதிக்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை பைக்குகளில் கொச்சின், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வால்பாறைக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல் (60) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். வாட்டர்பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் வந்தபோது ஒரு காட்டு யானை சாலையை கடந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்தும் மைக்கேல் நிற்காமல் அலட்சியமாக யானையை கடக்க முயற்சித்தார்.
அப்போது ஆக்ரோஷமான யானை, ஓடி வந்து பைக்குடன் மைக்கேலை தூக்கி வீசியது. இதில் பைக்குடன் அருகே உள்ள பள்ளத்தில் மைக்கேல் விழுந்தார். உடனே யானையிடமிருந்து தப்பிக்க காட்டு பகுதியில் ஓடியவரை, விடாமல் துரத்தி சென்று தாக்கியது. இதில் மைக்கேல் பலத்த காயமடைந்தார். பின்னர் யானை சென்றுவிட்டது. தகவலறிந்து வனத்துறையினர் வந்து மைக்கேலை மீட்டு வாட்டர்பால்ஸ் எஸ்டேட் தோட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக வனத்துறையினர் பொள்ளாச்சி கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பைக்குடன் மைக்கேலை யானை தூக்கி வீசி தாக்குவதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
The post சாலையில் நிற்பதை பார்த்தும் கடக்க முயன்ற ஜெர்மனி சுற்றுலா பயணியை பைக்குடன் தூக்கி வீசிய யானை: அலட்சியத்தால் பலியான சோகம் appeared first on Dinakaran.
