×

கிராமத்திற்குள் வராமல் சென்ற 2 தனியார் பேருந்துகள் சிறைபிடிப்பு: 2 மணிநேரம் பரபரப்பு

பெரணமல்லூர், ஜன. 22: பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் பகுதி வழியே வேலூர் பகுதியில் இருந்து ஆரணி, சேத்துப்பட்டு வழியாக செஞ்சி செல்லும் தனியார் பேருந்துகள் வந்து சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நாள்தோறும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஆரணி, சேத்துப்பட்டு, வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஊருக்குள் வரும் தனியார் பேருந்துகளில் திரும்பி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனியார் பேருந்துகள் இரண்டும் பகல் நேரத்தில் மட்டும் கொழப்பலூர் பகுதிக்கு வருவதும், இரவு நேரத்தில் வராமல் ஆரணி-சேத்துப்பட்டு பிரதான நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருந்தது. மேலும் வெளியிடங்களுக்கு சென்று இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் இந்த தனியார் பேருந்துகளில் திரும்பும் அப்பகுதி மக்களை கூட்ரோடு பகுதியில் இறக்கி விட்டு செல்வதால் இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் வயதான முதியோர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சிரமப்பட்டு நடந்து வந்து சென்று கொண்டிருந்தனர்.

இரவு நேரத்தில் கிராமத்திற்கு பஸ் வசதி இருந்தும் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு கொண்டிருந்ததை அறிந்து இளைஞர்கள் நேற்று திடீரென காலை நேரத்தில் ஊருக்குள் வந்த இரண்டு தனியார் பஸ்களையும் மடக்கி சிறை பிடித்தனர். இரவு நேரத்தில் ஊருக்குள் வந்தால் தான் விடுவோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பெரணமல்லூர் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது உரிமையாளர்கள் இனிமேல் வழக்கம் போல் கிராமத்திற்கு இரவு நேரத்தில் பேருந்து வந்து செல்லும் என உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து சிறை பிடித்த பேருந்தை அப்பகுதி மக்கள் விடுவித்தனர். இதனால் 2 மணிநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கிராமத்திற்குள் வராமல் சென்ற 2 தனியார் பேருந்துகள் சிறைபிடிப்பு: 2 மணிநேரம் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Vellore ,Senchi ,Arani ,Sethupattu ,Kolhapur ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை...