×

வால்பாறை அருகே வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

 

வால்பாறை, ஜன.21: வால்பாறை உப்பாசி எஸ்டேட்டில் புகுந்த காட்டு யானை, ஆராய்ச்சியாளர் வீட்டை உடைத்து, அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது. வால்பாறையை அடுத்துள்ள உப்பாசி எஸ்டேட்டில், ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்து வருபவர் ஆராய்ச்சியாளர் டாக்டர் அனீஷ் பாபு. நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பணிகள் முடித்து அனிஷ் பாபு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டை காட்டு யானை உடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறினார். பின்னர் வனத்துறையினரை அழைத்து யானையை விரட்டிய பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். வீட்டில் சமையல் அறை மற்றும் பல்வேறு பகுதிகளில் ஜன்னலை உடைத்து யானை உணவு தேடியுள்ளது.

இதனால் வீட்டில் உள்ள சமையல் பொருட்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உடைந்து கிடப்பதை கண்டு டாக்டர் அனீஷ் பாபு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கேரளாவில் இருந்து யானைகள் அப்பகுதியில் புகுந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கும், உடமைகளுக்கும் வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post வால்பாறை அருகே வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Valparai ,Valparai Upasi Estate ,Upasi Estate ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது