×

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பால் மனுநீதி ஆட்சி நடத்த முடியவில்லை என்பதால் அமித்ஷா புலம்புகிறார்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

தாம்பரம்: நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை விமர்சித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று மாலை மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசுதனன், துரைசாமி, மூர்த்தி, விஸ்வநாதன், தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ச.ஜெயப்ரதீப், பகுதி செயலாளர்கள் பெருங்களத்தூர் சேகர், திருநீர்மலை ஜெயக்குமார், செம்பாக்கம் ரா.சுரேஷ் மாடம்பாக்கம் ஆ.நடராஜன், கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே அம்பேத்கருக்கு மிகப்பெரிய மரியாதை கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அம்பேத்கர் இல்லையென்றால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்கு எந்தவித சலுகையும் இருந்து இருக்காது. 18 சதவீதம் அரசியல் சட்டத்தில் இயற்றி கொடுத்ததால் தான் இந்தியா முழுவதும் பலகோடி பேர் முன்னம் அடைந்துள்ளார்கள். அவரால் தான் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகமுடிகிறது. அரசியல் சட்டம் இல்லையென்றால் நாடாளுமன்றம் இல்லை, நாடாளுமன்றத்தை உருவாக்கி கொடுத்தது அம்பேத்கர் தான், அந்த நாடாளுமன்றத்தில் அமர்ந்துக்கொண்டு இப்படி பேச அவர்களுக்கு துணிச்சல் வருகிறது என்றால் இதுதான் அவர்களது குள்ளநரி தனம், அமித்ஷா இப்படி பேச தூண்டியது முழுகாரணம் மோடி தான். நாட்டு மக்கள் மீது நம்பிக்கை உள்ளவராக மோடி இருந்தால் அமித்ஷாவை வெளியேற்றி இருக்கவேண்டும், சபாநாயகர் அவரை வெளியேற்றி இருக்கஙேண்டும், அரசியல் சாசனத்தின் மீது உறுதி மொழி எடுத்துவிட்டு பதவி ஏற்ற பின் அதை எழுதியவரையே இப்படி பேசினார்.

அரசியல் சாசனத்தை அம்பேத்கர் இயற்றியதில் இருந்து ஆர்எஸ்எஸ், ஜனசங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை, மனுநீதி ஆட்சி நடத்த அவர்கள் விரும்பினார்கள், அதற்கு அம்பேத்கர் இடம் கொடுக்கவில்லை, மதசார்பற்ற நாடாக, பன்முகதன்மையுடன் இது இருக்கவேண்டும் என்று அவர் கொண்டுவந்த காரணத்தால் அம்பேத்கர் படத்தை எரித்தார்கள், அன்று முதல் இன்றுவரை அம்பேத்கர் என்றால் வேப்பங்காய்யாக உள்ளது. அம்பேத்கரால் எல்லோரும் முன்னேறிவிட்டார்கள் இல்லையென்றால் இந்த சமுதாயத்தை மனுநீதி என்ற பெயரால் ஆட்டிபடைக்க நினைத்தவர்கள், ஆட்டம்போட முடியாமல் இருப்பதால் கோபத்தை வெளிபடுத்தியுள்ளார்கள். இந்த ஆர்பாட்டம் நடத்த காரணம் அமித்ஷா அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும், அரசியல் சட்டம் ஏற்றியவரை இழிவாக பேசி அவமானப்படுத்திய அமித்ஷா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க கூட தகுதி இல்லை,’’ என்றார்.

The post அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பால் மனுநீதி ஆட்சி நடத்த முடியவில்லை என்பதால் அமித்ஷா புலம்புகிறார்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Ambedkar ,R.S. Bharathi ,Tambaram ,Kanchi North District DMK ,Shanmugam Road, West Tambaram ,MLA ,S.R. Raja ,Union ,Home Minister ,DMK ,Dinakaran ,
× RELATED ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்