×

ஏரி உபரிநீர் 100 வீடுகளை சூழ்ந்தது பொதுமக்கள் பாதிப்பு பொன்னை பகுதியில்

பொன்னை, டிச.4: பொன்னை பகுதியில் ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். வேலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதேபோல், பொன்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பொன்னை, வள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வழிந்து வருகிறது. இந்நிலையில், பொன்னையில் உள்ள பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் நேற்று வெளியேறியது.

இந்த தண்ணீர் கீரைசாத்து பெரிய ஏரிக்கு கால்வாய் வழியாக செல்கிறது. ஆனால், அந்த கால்வாய் தூர்ந்துபோய் உள்ளதால் கால்வாயில் செல்லும் உபரிநீர் வெளியேறி பொன்னையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சேதமானது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த மழையால் கலவகுண்டா அணை நிரம்பி தண்ணீர் நேற்று காலை 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் பொன்னை ஆற்றில் வருவதால் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஏரி உபரிநீர் 100 வீடுகளை சூழ்ந்தது பொதுமக்கள் பாதிப்பு பொன்னை பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Benjal ,Ponnai ,Dinakaran ,
× RELATED வேலூரில் இருந்து விழுப்புரம்...