வேலூர், டிச.20: காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டில் ₹46 ஆயிரம் சிக்கிய விவகாரத்தில் பெண் சார்பதிவாளர் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில், ஆய்வாளர் விஜியலட்சுமி மற்றும் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலி, பீரோ, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கணக்கில் வராத ₹23 ஆயிரத்து 500 மற்றும் அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்களிடம் இருந்து ₹22 ஆயிரத்து 500 என மொத்தம் ₹46 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், காவேரிப்பாக்கம் சார் பதிவாளராக பணியாற்றி வந்த மேகனா, ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவு இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் காவேரிப்பாக்கம் சார் பதிவாளர் பொறுப்பிற்கு, உதவியாளராக உள்ள வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அதிகாாரிகள் தெரிவித்தனர்.
The post பெண் சார்பதிவாளர் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் விஜிலென்ஸ் ரெய்டில் பணம் சிக்கிய விவகாரம் appeared first on Dinakaran.