×

விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு: 108 ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் தவிப்பு

 

விருத்தாசலம், டிச. 2: விருத்தாசலம் பகுதியில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. எருமனூர், குப்பநத்தம் பகுதிகளில் 84 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அதன்படி கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள அம்மேரி, விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர், பரவளூர், வேட்டக்குடி, வண்ணான் குடிக்காடு, டி.வி.புத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கூரை வீடுகள் இடிந்து சேதமாகின.

இதுகுறித்து விருத்தாசலம் வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்து பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். விருத்தாசலம் மணலூர் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் யாரும் வெளியேற வழி இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விருத்தாசலம்-கடலூர் சாலையில் அமைந்துள்ள விருத்தாசலம் தாசில்தார் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் வெளியேற வழி இல்லாமல் மழைநீர் தேங்கியுள்ளது.

விருத்தாசலம் போலீஸ் நிலையம் அருகில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. அதேபோல் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள 2 தரைப்பாலங்களையும் தண்ணீர் மூழ்கடித்தபடி செல்வதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விவசாய விளைநிலங்களில் புகுந்த மழை வெள்ளம் வெளியேற வழி இல்லாததால் ஒரு சில வாரங்களுக்கு முன்பு பயிரிட்ட மணிலா பயிர்கள் முளைவிட்ட நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் விருத்தாசலம்-திட்டக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சத்தியவாடி அருகே சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே கிடந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத சூழ்நிலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் வசந்த பிரியா, வருவாய் ஆய்வாளர் ராணி தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையில் கிடந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அந்த நேரத்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து பாதிப்பில் சிக்கியது. பின்னர் அவ்வாகனத்தை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்தனர்.

The post விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு: 108 ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam-Thittakudi highway ,Vridthachalam ,Benjal ,Karuvepilangurichi ,Pennadam ,Erumanoor ,Kuppanantham ,Vriddhachalam-Thittakudi highway ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தில்...