×

புதுச்சேரியில் 8 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை

புதுச்சேரி, டிச. 21: புதுச்சேரி லாஸ்பேட்டையில் 170 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இதில் 1502 மீட்டர் ஓடுதளம் உள்ளது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய கூடுதலாக 247 ஏக்கர் நிலம் தேவை. இதில் 217 ஏக்கர் நிலம் விழுப்புரம் மாவட்டத்தில் வருகிறது. இந்த நிலங்களை கையகப்படுத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது. விமானத்தில் போதிய பயணிகள் பயணிக்காததால் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 8 மாதங்களாக புதுவையில் இருந்து விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இதையடுத்து புதுச்சேரி அரசு மீண்டும் விமான சேவையை துவங்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக இண்டிகோ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டு டிசம்பர் 20ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை துவங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை 11.10 மணிக்கு பெங்களூரில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம் 74 பயணிகளுடன் புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானம் தரையிறங்கியதும் ஊழியர்கள் விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு அளித்தனர். பின்னர், விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஐதராபாத்துக்கு விமானம் புறப்பட்டது.

இந்த விமான சேவையை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், தலைமை செயலர் சரத் சவுகான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, சுற்றுலா துறை இயக்குநர் முரளிதரன், புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விமான சேவை தினமும் இருக்கும். பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர், மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். அதேபோல், ஐதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 பெங்களூரு சென்றடையும்.

The post புதுச்சேரியில் 8 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Hyderabad, Bangalore ,Laspettai, Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் இருந்து 8 மாதங்களுக்கு...