×

முதுநகர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மக்களின் சேவையே காவலர்களின் பணி

கடலூர், நவ. 26: முதுநகர் காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காவலர்களின் பணி சேவைக்கான பணி என உணர்ந்து பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் வந்தார். அப்போது கடலூரில் ₹80 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார். தொடர்ந்து முதுநகர் பகுதியில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். அப்போது வழியில் உள்ள புதுநகர் காவல் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார்.

இதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் பரபரப்படைந்தனர். பின்னர் துணை முதல்வரை காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் வரவேற்றனர். ஆய்வின்போது முதுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரம், நிலைய எழுத்தர் அறை, பதிவேடுகள், ஆண் கைதி அறை, பெண் கைதிகள் அறை, காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சிசிடிவி பதிவேடுகள், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து காவலர்களின் பணி மக்கள் பாதுகாப்பு மற்றும் சேவைக்கான பணி என்ற நிலைப்பாட்டை உணர்ந்து அனைவரும் சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post முதுநகர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மக்களின் சேவையே காவலர்களின் பணி appeared first on Dinakaran.

Tags : Muthunagar ,police station ,Cuddalore ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Mutunagar police station ,Muthunagar police station ,Dinakaran ,
× RELATED பெண் போலீசிடம் போதையில் சீண்டல் சிறப்பு எஸ்ஐ அதிரடி மாற்றம்