- தமிழ்நாடு கடல்சார் வாரியம்
- பெரிய பச்சை துறைமுக
- கடலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கடலூர்
- உபனார்
- பரவநாரு
- வங்காள விரிகுடா
- தின மலர்
* தமிழ்நாடு ஜவுளித்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும், உள்ளூர்வாசிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்
கடலூர் துறைமுகமானது, வங்காள விரிகுடாவில் இருந்து தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உப்பனார் மற்றும் பரவனாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி துறைமுகமாகும். இத்துறைமுகம் சென்னைக்கு தெற்கே 180 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரிக்கு தெற்கே 25 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. துறைமுக கலங்கரை விளக்கமானது 19மீ உயரத்தில் 5 வினாடிகளுக்கு ஒரு முறை வெள்ளை நிற ஒளி ஒளிரும். துறைமுகத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இதனால் துறைமுகத்திற்கு சாலை இணைப்பு நன்றாக உள்ளது.
அகலப்பாதை இணைப்புடன் கூடிய கடலூர் துறைமுக சந்திப்பு துறைமுகத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்திற்கு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம் போன்ற நகரங்களில் இருந்து ரயில் இணைப்பு உள்ளது. இந்நிலையில், கடலூரில் பசுமை துறைமுகம் தொடங்க தமிழக கடல் சார் வாரியம் முடிவு செய்துள்ளது. பசுமை துறைமுகம் என்பது பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலமும், குறைந்த மற்றும் பூஜ்ஜிய கார்பன் எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிக்கும் துறைமுகமாகும்.
இந்த துறைமுகங்கள் ஆற்றல்- தீவிர முனைய உபகரணங்கள், துறைமுகத்தில் கப்பல் செயல்பாடுகள் மற்றும் கப்பல் பதுங்கு குழி (எரிபொருள் நிரப்புதல்) போன்ற நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன. காட்டுப்பள்ளிக்குப் பிறகு இரண்டாவது முக்கிய திட்டமாக கடலூர் பழைய துறைமுகத்திற்கு அருகில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான பசுமை துறைமுகத்தை விரைவில் தொடங்குகிறது. இந்தத் துறைமுகமானது ஏற்கனவே உள்ள துறைமுகத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைய உள்ளது. சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் இந்த பசுமை துறைமுகம் அமைகிறது.
13.5 மில்லியன் டன் ஆரம்ப திறன் முதல் 40 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் அமைக்கப்படவுள்ள இத்துறைமுகத்தில் 3.6 கி.மீக்கு மேல் 25 பெர்த்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்புகள் இடம்பெறுகிறது. இதன் மூலம் கடலோர கப்பல் செலவுகளை குறைத்து, தொழில் வளர்ச்சியை அதிகரித்து, தமிழகத்தின் ஜவுளித் துறையை ஆதரிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஆண்டு ஒன்றுக்கு 170 கிலோ எடையுள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் பருத்தி மூட்டைகள் தேவைப்படுகிறது.
இவற்றை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு செய்யப்படும்போது தரை வழியாக கொண்டு வரும் செலவைவிட மிகக் குறைவான செலவில் இறக்குமதி செய்யப்படும். துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 18 ஏக்கர் திறந்தவெளி பரப்பில் உப்பனாறு சரக்குத் துறையும், துறைமுகத்தின் தெற்கு பகுதியில் 45 ஏக்கர் திறந்தவெளி பரப்பில் பரவனாறு நீர்முகப்புடன் நல்ல சாலை இணைப்புடன் கூடிய பல்வகைப்பட்ட சரக்குகள் கையாள்வதற்கு ஏற்றதாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஜவுளி துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கடலூர் துறைமுகம் ரயில் நிலைய சந்திப்பில் இருந்து துறைமுகத்திற்கு நேரடியாக ரயில் போக்குவரத்து ஏற்படுத்தவும் திட்டம் தயார் செய்யப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர்கள் விரைவில் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் உலக நாடுகளுக்கு கடலூரில் இருந்து மீன்கள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் வழிவகை ஏற்படும்.
இதன்மூலம் பல கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணி ஈர்க்கப்படும். 49 மீனவ கிராமங்களும் பயன்பெறும். மேலும் தொழில் உற்பத்திகள் மேம்பட்டு உள்ளூர்வாசிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதால் கடலூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இதனால் பசுமை துறைமுகம் அமைப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு கடல் சார் வாரியம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் கடலூர் மக்கள் காத்திருக்கின்றனர்.
* விரைவில் சரக்கு போக்குவரத்து
துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் 2 கப்பல்கள் நிறுத்தும் தளங்கள் அமைக்கும் வகையில் முகத்துவாரப் பகுதியில் இருந்து பரவனாறு வரை 1,700 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. ஒரு வருடத்துக்கு முன்பு புதிய துறைமுகம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
* தூர்ந்து போன தண்டவாளங்கள்
ஆசியாவின் பழமையான துறைமுகங்களில் கடலூர் துறைமுகமும் ஒன்று. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வியாபார தலைநகரமாக விளங்கிய இத்துறைமுகம் தென்னிந்தியாவின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கடலூர் துறைமுகத்திற்கு ரயில் போக்குவரத்து இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்குபின் படிப்படியாக குறைந்து 2002ல் கப்பல் வருகை குறைந்தது. அதற்கு முன்பே ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த ரயில் தண்டவாளங்கள் தூர்ந்து போய் கிடப்பதுடன், ஒருசில இடங்களில் அதற்கான தடயங்கள் வெளியே தெரிகின்றன. இங்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும்பட்சத்தில் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
The post கடலூரில் 40 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் ரூ.2,000 கோடியில் பிரமாண்ட பசுமை துறைமுகம்: விரைவில் பணியை தொடங்குகிறது தமிழ்நாடு கடல்சார் வாரியம் appeared first on Dinakaran.