×
Saravana Stores

சிலிகான் சிட்டிக்கு இணையாக ஐடி துறையில் மான்செஸ்டர் சிட்டி அசுர வளர்ச்சி: தொழில் தொடங்க போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்; உச்சம் தொட்டது நில மதிப்பு

நாட்டின் மிகப்பெரிய ஐடி நகரங்களாக கர்நாடகத்தின் பெங்களூரு, தெலங்கானாவின் ஐதராபாத், மகாராஷ்டிராவின் புனே நகரங்களுடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையும் உள்ளது. சென்னையில் சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான ஆயிரக்கணக்கான ஐடி நிறுவனங்களில் பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். சென்னை தவிர்த்து, தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் ஐடி நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்க, தமிழ்நாடு அரசு ஊக்கம் தந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக ஐடி நிறுவனங்களின் தேர்வாக கோவை அமைந்துள்ளது.

கோவையில் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை அமைத்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் இதுவரை அரசின் எல்காட் அமைப்பில் பதிவு செய்த, 78 ஐடி நிறுவனங்கள் உள்ளன. கோவையை பொறுத்தவரை எல்காட் சார்பில் ஏற்கனவே, கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின்கீழ், கோவை பீளமேடு அரசு மருத்துவக்கல்லூரி அருகே 17 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதில், உலகின் பல பெரிய முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்குகின்றன.

இதை, அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்துவைத்தார். இதன் அருகே, 2.60 லட்சம் சதுர அடியில் ஐடி டவர் பணியும் நடந்து வருகிறது. இதுதவிர, எல்காட் சார்பில் கோவை விளாங்குறிச்சியில் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில்‌ ரூ.114.16 கோடி மதிப்பில் மேலும் ஒரு டைடல் பார்க் (தகவல்‌ தொழில்‌நுட்ப பூங்கா) உருவாக்கப்பட்டுள்ளது. இது, 3.94 ஏக்கர்‌ பரப்பளவில்‌ கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக, பொதுப்பணித்துறை மூலம்‌ இந்த ஐடி பார்க் கட்டப்பட்டுள்ளது. இதை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் இதுவரை தமிழ்நாடு அரசின் எல்காட் அமைப்பில் பதிவுசெய்த, 78 ஐடி நிறுவனங்களில் மொத்தமாக 24 ஆயிரம் பேர் ஐடி துறை சார்ந்த பணியில் உள்ளனர். தவிர, தனியார் டெக் பார்க்குகளும், ஆங்காங்கே உள்ளன. இங்கும், உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. விளாங்குறிச்சி டைடல் பார்க் அருகிலேயே, 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்பட உள்ளது. கலைஞர் ஆட்சிகாலத்தில் சென்னையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட ராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தைப்போல கோவையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 36 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்ககூடிய வகையில், 30 லட்சம் சதுரஅடி பரப்பளவில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.

இது, கோவை மாநகரத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என கடந்த 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தபோது தெரிவித்தார். 2024-2025 தமிழ்நாடு பட்ஜெட்டில், ‘‘கோவையில் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பம், வாழ்வியல் அறிவியல், விண்வெளி, பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள், ஐடி துறை சார்ந்த வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் ஐடி துறை சார்ந்த ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவையில் உள்ள பருவநிலை, ஏகப்பட்ட சுற்றுலா பகுதிகள், உணவு மற்றும் குறைந்த மாசுபாடு காரணமாக ஐடி துறையை சேர்ந்தவர்கள் கோவையை தேர்வு செய்கிறார்கள். அதனால், ஐடி துறையை பொறுத்தவரை கோவை மாநகரம், இன்னொரு பெங்களூருவாக (சிலிகான் சிட்டி) உருவெடுத்து வருகிறது. மருதமலை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் டைசெல் பயோ டெக்னாலஜி பார்க், கீரணத்தம் கே.ஜி.ஐ.எஸ்.எல். டெக் பார்க், ஈச்சனாரியில் ரத்தினம் டெக் ஜோன் வரிசையில் மேலும் பல நிறுவனங்கள் வர உள்ளன. ஐடி நிறுவனங்களை கவர்ந்து இழுப்பதில் சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு போட்டியாக கோவை மாறியிருக்கிறது.

தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்படும் கோவை சமீப காலமாக ஐடி துறையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. காக்னிசென்ட், ராபர்ட் பாஷ், டி.சி.எஸ், இன்போசிஸ், அமெரிக்காவை சேர்ந்த புரோட்டிவிட்டி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கோவையில் இயங்கி வருகின்றன. கோவையில் 13 மாடிகள் கொண்ட டைசெல் பயோ டெக் பார்க்கில், தொடக்கத்தில் வரவேற்பு குறைவாகத்தான் காணப்பட்டது. ஆனால், சமீபத்தில் புரோட்டிவிட்டி நிறுவனம் தனது அலுவலகத்தை திறந்த பிறகு, அங்கு 13 மாடிகளும் நிரம்பிவிட்டன.

சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1.60 மில்லியன் சதுர அடியில் ஐடி பார்க் கட்ட கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மலுமிச்சம்பட்டி பகுதியில் ‘எல் அண்ட் டி’ நிறுவனம் 1.85 மில்லியன் சதுரடி பரப்பளவில் ஐடி பார்க் கட்டும் பணியை துவக்கியுள்ளது. இதேபோல், நீலாம்பூர் பகுதியில் கே.பி.ஆர். குழுமத்தின் ஐடி பார்க், ஆதித்யா டெக் பார்க் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. காளப்பட்டியில் உள்ள எஸ்.வி.பி. ஐடி பூங்காவை விரிவாக்கம் செய்யும் பணிகளும் துவங்கியுள்ளது. ஆக, ஐடி நிறுவனங்களை கவர்ந்து இழுப்பதில் சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு ‘டப் பைட்’ தரும் நகரமாக கோவை மாறியிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் 2024 ஜனவரி நிலவரப்படி, ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் சிறந்த வளர்ச்சியை பெறும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவை, ஆண்டுக்கு 20 சதவீதம் வளர்ச்சியை எட்டுகின்றன. தற்போதைய நிலவரப்படி, கோவை விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசுத்துறை ஐடி நிறுவனங்களில் சுமார் 48 ஆயிரம் மென்பொருள் பொறியாளர்களுக்கு நேரடியாகவும், சுமார் 1 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இங்கு, டிசிஎஸ், விப்ரோ, போசு நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அமைய உள்ளது. சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, கீரணத்தம் பகுதியில் ஐடி நிறுவனங்களின் அரசு வளர்ச்சி காரணமாக, இப்பகுதியில் நில மதிப்பும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது. இது, தற்போது ரூ.28 லட்சமாக உயர்ந்துள்ளது. ஐடி நிறுவனங்கள் இதே வேகத்தில் கால் பதித்தால், அடுத்த 8 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் ‘டெக் சிட்டி’யாக கோவை மாநகரம் மாறும், கோவை மிகப்பெரிய ஐடி மையமாக (IT Hub) உருவெடுக்கும்.

* சரவணம்பட்டி பகுதியை குறி வைப்பது ஏன்?
கோவை மாவட்டம் மொத்தம் 4,723 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இம்மாவட்டத்தில், ஐடி நிறுவனங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இல்லாமல் மொத்தமாக சரவணம்பட்டி, விளாங்குறிச்சி பகுதியில் குவிந்து கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தண்ணீர் வசதி. இப்பகுதியில் பில்லூர் குடிநீர் எவ்வித தடையும் இன்றி தாராளமாக கிடைக்கிறது. அத்துடன், நிலத்தடி நீரும் எளிதாக கிடைக்கிறது. புதிய கட்டிடங்கள் அமைக்க ஏதுவாக, திறந்தவெளி நிலப்பரப்பும் இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இதன்காரணமாகவே இங்கு ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து கால் பதிக்கின்றன.

* வாழ்க்கை தரம், காலநிலையால் கோவையில் பணியாற்ற ஆர்வம்
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: பொதுவாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் ஆண்டுதோறும் பணியைவிட்டு வெளியேறி, வேறு நிறுவனத்தில் சேருவது வழக்கம். ஆனால், கோவையில் உள்ள உள்கட்டமைப்பு, வாழ்க்கை தரம், காலநிலை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் கோவையில் பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பணியை விட்டு, செல்ல விரும்புவதில்லை.

கோவை மாவட்டத்தில் ஐடி தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது. கோவையில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் உள்ள காரணத்தால், படித்தவுடன் ஐடி தொழில் நிறுவனங்களில் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எதிர்வரும் காலங்களில் கோவை மாவட்டம் ஐடி துறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

* கோவை விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசுத்துறை ஐடி நிறுவனங்களில் சுமார் 48 ஆயிரம் மென்பொருள் பொறியாளர்களுக்கு நேரடியாகவும், சுமார் 1 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது. இது, தற்போது ரூ.28 லட்சமாக உயர்ந்துள்ளது.
* கோவை மாவட்டத்தில் 2024 ஜனவரி நிலவரப்படி, ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது.
* ஐடி நிறுவனங்கள் இதே வேகத்தில் கால் பதித்தால், அடுத்த 8 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் ‘டெக் சிட்டி’யாக கோவை மாநகரம் மாறும், கோவை மிகப்பெரிய ஐடி மையமாக (IT Hub) உருவெடுக்கும்.

* சவால்கள் என்ன?
கோவை மாநகரில் அடுத்தடுத்து ஐடி பார்க் அமைப்பது முன்னேற்றத்திற்கான முடிவு. லட்சக்கணக்கான பணியாளர்கள் கோவையில் தங்கி வேலை செய்யும் சூழல் உருவாகும்போது, கோவையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியமாகும். குறுகிய ரோடுகள், திடக்கழிவு மற்றும் நீர் மேலாண்மை, குடியிருப்புகள் பற்றாக்குறை என பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். ஐடி நகராக உருவெடுத்தால் தினமும் டன் கணக்கில் திடக்கழிவும், பல லட்சம் லிட்டர் கழிவுநீரும் வெளியாகும். எனவே, மாநகரின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி இந்த பிரச்னைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும். கோவை ரயில் நிலையம் மேம்பாடு, பீளமேடு சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம், மாநகரில் மெட்ரோ ரயில் வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஐடி பார்க் அருகிலேயே அதிநவீன வசதிகள் கொண்ட குடியிருப்புகள், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் என அனைத்தையும் உருவாக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் ெபாறியாளர்கள்.

* அடுத்தடுத்து ஐடி பார்க்தஞ்சையில் ரூ.200 கோடியில் விமான நிலையப் பணி: – விரைவில் தொடக்கம்
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் 3.40 ஏக்கர் பரப்பளவில் 55,000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி கட்டிடமாக டைடல் பூங்கா கட்டப்பட்டது. இதனை கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திறந்த 15நாட்களிலேயே அங்கு அனைத்து நிறுவனங்களும் முழுமையாக நிரம்பியது. தற்போது பல ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஐடி துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அருகில் உள்ள 3.4 ஏக்கர் நிலத்தில் டைடல் நியோ பூங்காவின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி மாநிலத்தின் முக்கியமான ஐடி மையமாக தஞ்சாவூரை மாற்ற உதவும்.

தஞ்சாவூர் நியோ டைடல் பூங்காவில் HBS என்ற ஐடி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இது அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு மெடிக்கல் பில்லிங், மெடிக்கல் கோடிங் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஐடி பார்க் விரிவாக்க பணி மேகமெடுப்பதால் தஞ்சாவூரில் ரூ.200 கோடியில் விமான நிலைய பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் உலகப்போர் நடந்த போது தஞ்சாவூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இனாத்துக்கான்பட்டியில் ஆங்கிலேயர்களால் விமானப்படை மையம் அமைக்கப்பட்டது.

போருக்கு பின்னர் இந்த ைமயம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தை தென் தீபகற்பத்தின் முக்கியமான விமானப்படை தளமாக இந்திய விமானப்படை மேம்படுத்தியுள்ளது. இதற்கிடையே 40 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு சிறிய ரக பயணிகள் விமானமான ‘வாயு தூத்’ என்ற விமான சேவையை ஒன்றிய அரசு தொடங்கியது. தஞ்சாவூரில் விமான சேவையில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 2 ஆண்டுகளில் இச்சேவை நிறுத்தப்பட்டது. இருப்பினும் தஞ்சாவூரில் விமான சேவையை தொடங்க பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் ரூ.200 கோடியில் விமான நிலையம் அமைக்க, ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் எம்.பி முரசொலி கூறுகையில், ‘விமான முனையத்துக்கான சாலை தற்போது வளைவு, நெளிவாக உள்ளது. இந்த பாதை நேராக கிடைத்தால் விமான நிலையம் அமைவது உறுதியாகிவிடும். இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடமும், விமான போக்குவரத்துதுறை அமைச்சரிடமும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அவர்களும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். இதனிடையே, மற்றொரு பாதை இருப்பதாக மாவட்ட கலெக்டரும் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் விமான நிலையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post சிலிகான் சிட்டிக்கு இணையாக ஐடி துறையில் மான்செஸ்டர் சிட்டி அசுர வளர்ச்சி: தொழில் தொடங்க போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்; உச்சம் தொட்டது நில மதிப்பு appeared first on Dinakaran.

Tags : Manchester ,City ,Silicon City ,Bengaluru ,Karnataka ,Hyderabad ,Telangana ,Pune ,Maharashtra ,Chennai ,Tamil Nadu ,Manchester City ,
× RELATED பயணிகள் வரத்து நாளுக்கு நாள்...