* 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, டிரஜ்ஜர் எந்திரம் மூலம் சாம்பல் சகதிகளை அகற்ற முடிவு
எண்ணூர் பகுதியை ஒட்டியுள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள அலையாத்தி காடுகள் மீன், இறால், நண்டு போன்ற பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு பயன்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வெகுதூரம் பறந்து வரக்கூடிய ஸ்ட்ரோக், லேஸ்ஸர், கார்மோரெண்ட், கிரேட், டாட்டர், யூரேசியன்கர்லேவ், காஸ்பியன், டேர்ன், விஸ்கர்ட், கேட்டில்எக்ரேட், பாண்ட், ஹேரான், கிரே ஹெரான், பிரவுன் ஹெட்குல் போன்ற பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு சரணாலயமாகவும், காற்றில் மாசு ஏற்படுவதை தடுக்கவும் இந்த அலையாத்தி காடுகள் பயன்படுகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையின்போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கச்சா எண்ணெய் கழிவு, அனல்மின் நிலையத்தின் சாம்பல் சகதிகள் ஆகியவை ஆற்றில் கலந்து கொசஸ்தலை ஆறு மாசடைந்ததோடு, அலையாத்தி காடுகள் மீதும் படர்ந்தது. இதனால் பறவை இனங்கள் பாதிக்கப்பட்டன. மீன்களும் செத்து மடிந்தன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.
இதையடுத்து வனத்துறை, நீர்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீனவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆற்றுநீர் மற்றும் அலையாத்தி காடுகளில் படிந்திருந்த கச்சா எண்ணெய் மற்றும் சாம்பல் கழிவுகளை அகற்றியதோடு, பாதிக்கப்பட்ட பறவைகளை மீட்டெடுத்தன. ஆனாலும் இச்சம்பவத்தில் எண்ணூர் முதல் காட்டுப்பள்ளி வரை பல கிமீ தூரத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருந்த அலையாத்தி காடுகளின் ஒரு பகுதி அழிந்தது.
இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டதோடு வெளிநாட்டு அறியவகை பறவைகளின் வருகையும் குறைந்தது. இதையடுத்து இந்த அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும் வனத்துறை திட்டமிட்டது. அதன்படி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சடையங்குப்பம், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி வரை கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் சுமார் 1.75 லட்சம் அலையாத்தி செடிகளும், சுமார் 1.60 லட்சம் பல்வேறு வகையான மரக்கன்றுகளும் வைக்கும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய சாம்பல் எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் பல ஆண்டுகளாக படிந்ததால் சுமார் 5 அடி உயரத்திற்கு சாம்பல் சகதிகள் தற்போது தேங்கி கிடக்கின்றன. இதனால் எண்ணூர் முகத்துவாரம் பகுதியிலிருந்து காட்டுப்பள்ளி வரை கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கலந்ததால் நீர் மாசடைந்து மீன், இறால், நண்டு போன்ற நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு இதனால் பல்வேறு வகையான தொற்று நோய் ஏற்படுகிறது.
பெருவெள்ளம் ஏற்படும்போது கொசஸ்தலை ஆற்றில் நீர் சீராக செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள சாம்பல் சகதிகளை அகற்ற வடசென்னை அணுமின் நிலையம் திட்டமிட்டது. அதன்படி எண்ணூர் முகத்துவார ஆற்று மேம்பாலத்தில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையம் நுழைவாயில் வரை சுமார் 1.7 கிமீ தூரத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் கீழே படிந்துள்ள சாம்பல் சகதிகளை நீர்வளத் துறை மூலம் அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முதற்கட்டமாக ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கொசஸ்தலை ஆற்றில் டிரஜ்ஜர் எனக்கூடிய எந்திரம் மூலம் ஆற்றில் உள்ள சாம்பல் சகதிகளை எடுத்து மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், கடந்த சுனாமியின்போது எண்ணூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் அலையாத்தி காடுகள் தடுத்தன.
இவற்றின் மகத்துவம் தெரியாததால் கடந்த பல ஆண்டுகளாக அலையாத்தி காடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் கிடப்பில் விட்டனர். சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய நிறுவனங்களின் ரசாயன கழிவு, வடசென்னை அனல் நிலையத்தின் சாம்பல் போன்றவை ஆற்றில் படிந்ததால் ஆற்று நீர் மாசடைந்ததோடு அலையாத்தி காடுகளும் பாதிக்கப்பட்டது. அதை நம்பி வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்களும், மீனவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதன் உச்சமாக கச்சா எண்ணெய் கழிவு படிந்ததால் இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. எனவே கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள சாம்பல் சகதிகளை அகற்றும்போது அலையாத்தி காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதிகாரிகள் மிக கவனமாக செயல்பட்டு அலையாத்தி காடுகளை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சாம்பலை அலையாத்தி காடுகளுக்கும், சுற்று சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் எடுத்துச் சென்று, அப்படியே கிடப்பில் வைக்காமல் உடனடியாக வேறு பணிகளுக்கு பயன்படுத்தவேண்டும் என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே இதுபோன்று கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகளை அகற்றியுள்ளோம். அந்த முறையை பின்பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த பணிகள் பாதுகாப்பாக நடைபெறும் என்றனர்.
* அலையாத்தி செடிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது
இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள சாம்பல் சகதிகளை டிரஜ்ஜர் மூலம் எடுக்கும்போது ஏற்கனவே உள்ள அலையாத்தி காடுகளும், தற்போது புதிதாக நடப்பட்ட அலையாத்தி செடிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சாம்பல் சகதிகளை அகற்றும்போது அலையாத்தி காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசின் தீவிர நடவடிக்கை: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகளை அகற்றும் நீர்வளத்துறை appeared first on Dinakaran.