×
Saravana Stores

ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து: தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அலுவலர் பேட்டி; ராமேஸ்வரம் தீவில் ஆன்மிக படகு சவாரி அமைக்கவும் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும். ஆன்மிக சுற்றுலாப்படகு சவாரி இயக்கவும் திட்டம் உள்ளதாக தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அலுவலர் வள்ளலார் தெரிவித்தார். நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்.14ம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கும் நோக்கில் ராமேஸ்வரம் – தலைமன்னார், ராமேஸ்வரம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயக்குவதற்கு ராமேஸ்வரத்தில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர், தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர்‌ தீவின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயங்குவதற்கு பொருத்தமான இடங்கள் குறித்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஐஐடி குழு மணல் ஆய்வு செய்த பகுதிகள், தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம், தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார் கூறியதாவது, ‘‘ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை விரைந்து துவங்குவதற்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தொழில் மற்றும் கடல்வளம் பாதுகாப்புக்கு ஏற்றவாறு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமையும். முதல் கட்டமாக ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் இயக்கப்படும். இரண்டாம் கட்டமாக உள்ளூர் சுற்றுலா தலங்களான அக்னி தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால், குருசடை தீவு, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை படகில் சுற்றி பார்வையிடும் வகையில் ஆன்மிக படகு சவாரி துவங்கும் திட்டமும் உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது’’ என்றார்.

The post ராமேஸ்வரம் – தலைமன்னாருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து: தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அலுவலர் பேட்டி; ராமேஸ்வரம் தீவில் ஆன்மிக படகு சவாரி அமைக்கவும் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Tamil Nadu Maritime Board ,Executive Officer ,Rameswaram Island ,Sri Lanka ,Thalaimannar ,Chief Executive Officer ,Vallalar ,Nagai ,Sri Lanka Kangesanthurai… ,
× RELATED கடலூரில் 40 மில்லியன் டன் சரக்குகளை...