‘இப்ப இதுதாங்க டிரெண்ட்’ அப்படினு சொல்லிக்கிட்டிருக்கிற பல விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் போல பரவிக் கொண்டிருக்கிற ஒரு மேட்டரை நினைத்தாலே பகீர் என்கிறது. ஆம்… அந்த வினோத வைரஸின் பெயர்தான் ‘டைவர்ஸ்’. எங்க பார்த்தாலும் டைவர்சு…டைவர்சு… இது 2024 வருஷமா? இல்ல டைவர்ஸ் வருஷமா? என்று தெரியல. வருஷா வருஷம் டைவர்ச கொண்டாடுறாங்க. டைவர்ஸ் ஒரு கல்ச்சரா மாறிடுச்சு..
இது, கோலிவுட்டா? டைவர்ஸ்வுட்டா? என்று தெரியல. குறிப்பாக 2024ம் ஆண்டு மட்டும் முன்னணி பிரபலங்களின் டைவர்ஸ் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், இளைய சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணத்துக்கு வழிகாட்டியாகவும் அமைந்து உள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் சட்டப்படிதான் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை 1955 இந்து திருமண சட்டப்படி, ஆண்களுக்கான திருமண வயது 21, பெண்களுக்கு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது திருமண வாழ்வை எதிர்கொள்ளும் அளவுக்கு, இருவருக்கும் மனம், உடல் பக்குவத்தை தரும் என்கிறது சட்டம். பல பேர் கூடிய ஒரு சபையில் இரு மனங்களை திருமணம் என்கிற விவாகம் மூலம் இணைக்கும் சட்டமானது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்படும்போது சட்டப்படி ரத்து செய்து பிரித்து வைக்கும் நிகழ்வுக்கு பெயர்தான் விவாகரத்து. விவாகரத்து என்பது இருநபர்களின் தனிப்பட்ட முடிவு என்றாலும் சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய திரையுலகை பொறுத்தவரையில், தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் மற்றும் திரைக்கலைஞர்களை தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுவதில் தன்னிகரற்று திகழ்கிறார்கள் ரசிகர், ரசிகைகள். இதில் ஏராளமானோர் தங்கள் அபிமான திரைக்கலைஞர்களை, தங்களது நிகழ்கால வாழ்க்கைக்கான இன்ஸ்பிரேஷனாக நினைக்கின்றனர். இதனால் திரையில் தோன்றும் தங்கள் அபிமானத்துக்குரிய ஹீரோவோ அல்லது ஹீரோயினோ எந்த உடை அணிகிறாரோ, எந்த கம்பெனியின் மேக்கப் பொருட்களை உபயோகப்படுத்துகிறாரோ, எந்த மாதிரி ஹேர்ஸ்டைலில் வருகிறாரோ, அதை அப்படியே பின்தொடர்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
குறிப்பாக அவர்களின் காதல் அல்லது திருமண வாழ்க்கையில் அவர்களை போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சமீபகாலமாக சில தீவிரமான ரசிகர்கள், ஒரு படத்தில் ஹீரோ எந்த கெட்டப்பில் தோன்றுகிறாரோ, அதே கெட்டப்பில் தன்னையும் மாற்றிக்கொண்டு, தனது நண்பர்கள் புடைசூழ தியேட்டர்களுக்கு வந்து அலப்பறையும், ஆர்ப்பாட்டமும் செய்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். இவ்வாறு கொண்டாட்டங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், 2024ம் ஆண்டு கோலிவுட்டுக்கு சோக ஆண்டே என்று சொல்ல வேண்டும்.
காரணம் தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது நிகழ்ந்து வரும் பிரபல நட்சத்திரங்களின் விவாகரத்து செய்திகள்தான். தமிழ்ப் படவுலகில் கடந்த பல ஆண்டுகளில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களின் ரசிகர், ரசிகைகளின் மனதைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. நட்சத்திரங்களை ரோல் மாடலாக எடுத்து கொள்ளும் ரசிகர்கள் வாழ்க்கையிலும் அதே முடிவு என்பதுதான் வேதனையாக உள்ளது.
ஆனால், சினிமா பிரபலங்களின் வாழ்க்கையும், சாமானியனின் வாழ்க்கையும் ஒன்று இல்லை. இதை இளைய சமுதாயத்தினரும், ரசிகர்களும் புரிந்து கொள்வதில்லை. ஏனிந்த டைவர்ஸ் ஏற்படுகிறது எனப் பார்க்கலாமா? இளமை பருவத்தில் நமக்கு எல்லாம் ஏகப்பட்ட கமிட்மென்ட் இருக்கும். ஒரு சொந்த வீடு, கார், பிள்ளைகளுக்கு படிப்பு செலவு, வசதியான வாழ்க்கை, சுற்றுலா என ஏகப்பட்ட ஆசைகள் வரிசை கட்டி நிற்கும். இதற்காக கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று பணம் சேர்த்து, லோன் போட்டு, அதற்கு இஎம்ஐ என இளமைக்காலங்கள் ஓட்டமாகவே போய்க் கொண்டிருக்கும்.
நடுத்தர குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர், அந்த வீட்டை விட்டு நகர்ந்து கூட போக முடியாத அளவுக்கு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கும். அதே திரை பிரபலங்கள் உட்பட விவிஐபிகள் உள்ள பணக்கார குடும்பத்தில் தொழில், முதலீடு, பணம், புகழ் என ஓடிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு குடும்பமாக ஒன்றாக அமர்ந்து ஒருவேளை உணவு சாப்பிடுவதே அரிதிலும் அரிதாக இருக்கும். அன்றாடத் தேவையை பூர்த்தி செய்ய ஓடத்துவங்கும் வாழ்க்கையானது, பிற்காலத்தில் ஓட்டமே வாழ்க்கையாக, வாடிக்கையாகி விடும். அப்போது தம்பதியின் இளமைக்காலமே பறிபோய் இருக்கும். மனம் விட்டு பேசுவது குறைந்து போகிறது.
ஒருவிதமான தனிமையை உணரும்போதுதான், ‘எதற்காக இந்த வாழ்க்கை… பேசாம டைவர்ஸ் பண்ணிட்டு, தனியாய் வாழ்ந்துக்கிறேனே…’ என்ற விபரீத முடிவுக்கு சென்று விடுகின்றனர். இது ஒன்று மட்டும் காரணம் இல்லை. கருத்து வேறுபாடு, குடும்ப வன்முறை, தினமும் ஒரே முறையான வாழ்க்கையால் ஏற்படும் சலிப்பு, சந்தோஷம் இல்லாத இல்லற வாழ்க்கை, ஒரே வீட்டில் இருந்தாலும் முகம் பார்க்காமல் ஓடும் இடைவெளி, குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததால் ஏற்படும் சண்டை மற்றும் தனிமை, குடும்ப உறுப்பினர்கள் என காரணங்கள் நீண்டு கொண்டே செல்கிறது.
இதுதவிர பல ஜோடிகள் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து பிரிந்து விடுகின்றனர். ஒரு காலத்தில் விவாகரத்து பிரச்னை வெளியில் தெரியாது. ஆனால், இன்று சமூக வலைதள வளர்ச்சியால் நட்சத்திரங்கள் விவாகரத்து பூதாகரமாக வெடிக்கிறது. கலைத்துறை என்பது பேரும் புகழும், அதிக பணமும் எளிதில் ஈட்டக்கூடிய ஒரு துறை என்பதை யாரும் மறுக்க முடியாது. எவ்வளவு உயரத்துக்கு ஒருவர் செல்கிறாரோ, அதே அளவுக்கு பள்ளத்தில் விழவும் செய்வார்.
இதைத்தான் ஹாலிவுட் நடிகை மறைந்த எலிசபெத் டெய்லர் முதல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரையிலான விவாகரத்து நிகழ்வுகள் உணர்த்துகின்றன. கோலிவுட்டில் நடந்த சில விவாகரத்து சம்பவங்களை மட்டும் பார்ப்போம். கமல்ஹாசன்-வாணி கணபதி, கமல்ஹாசன்-சரிகா, கமல்ஹாசன்-கவுதமி (திருமணம் செய்யாமல் வாழ்ந்தனர்), சந்தீப் பாட்டியா -கவுதமி, பார்த்திபன்-சீதா, பிரேம் குமார் மேனன்- அம்பிகா, ஸ்ரீதர் ராஜகோபாலன்-அம்பிகா, திலீப்-மஞ்சு வாரியர், பிரபுதேவா- ரமலத், பிரபுதேவா-ஹிமானி சிங்,
பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, பிரகாஷ்ராஜ்-போனி வர்மா, ரகுவரன்-ரோகிணி, இயக்குனர் பிரியதர்ஷன்-லிசி, ரேவதி-சுரேஷ் மேனன், நளினி-ராமராஜன், அரவிந்த்சாமி-காயத்ரி ராமமூர்த்தி, சரத்குமார்-சாயாதேவி, பிரசாந்த்-கிரகலட்சுமி, இயக்குனர் ஏ.எல்.விஜய்-அமலா பால், விந்தியா-கோபாலகிருஷ்ணன், வனிதா விஜயகுமார்-ஆகாஷ், ஸ்வர்ணமால்யா-அர்ஜூன், இயக்குனர் செல்வராகவன்-சோனியா அகர்வால், சமந்தா-நாக சைதன்யா, நவாசுதீன் சித்திக்-அலியா, விஷ்ணு விஷால்-ரஜினி, தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,
சவுந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின் ராம்குமார், சித்தார்த்-மேக்னா, கார்த்திக் குமார்-பாடகி சுசித்ரா, டிடி என்கிற திவ்யதர்ஷினி, விஜேவாக இருந்து நடிகையான ரம்யா சுப்பிரமணியன், மீரா வாசுதேவன்-ேஜாதிர்மயி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, இமான்-மோனிகா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி, இயக்குநர் பாலா- அழகு மலர், ஜெயம் ரவி-ஆர்த்தி, நடிகை நிஹாரிகா, ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு. படிச்சு முடிக்கவே மூச்சு வாங்குகிறதா? இது முழு பட்டியல் இல்லை. இன்னும் பலர் உள்ளனர். மேற்கண்ட விவாகரத்து பட்டியலில் உள்ள பிரபலங்கள் பலர் 2வது, 3வது என திருமணம் செய்து கொண்டனர்.
சிலர் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். சினிமாவில் அன்பான மனைவி, அழகான குடும்பம் என்று நடித்தாலும் நிஜ வாழ்க்கையில், ‘அட… என்னப்பா… குடும்பம், பிரச்னைனு ஒரே போராய் போகுது.. போடு டைவர்சை… தனியாய் இருப்போம்’ என்று முடிவு எடுக்கின்றனர். ரசிகர்கள் மற்றும் மக்களின் ஆதரவால் பிரபலமடையும் நட்சத்திரங்களுக்கு சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்களை பின்பற்றும் ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்ட கூடாது. சினிமா நட்சத்திரங்களுக்கு புகழ், பணம், சொத்து என எல்லாம் இருக்கிறது. ஆனால், இதே நிலை சாமானிய ரசிகர்களுக்கு இருக்கிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சினிமா நட்சத்திரங்கள் வாழ்க்கை கீழே விழுந்தால் தனித்து எழுந்து நிற்க முடியும். சாமானியனால் முடியுமா?. வயதான காலத்தில்தான் ஒருவருக்கு மற்றொருவரின் உதவி கட்டாயம் தேவைப்படும்.
நம் குழந்தை பருவத்தில் பெற்றோர் கவனிப்பில் தொடங்கும் வாழ்க்கை சங்கிலியானது, அறுபடாமல் தொடரவே, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. வயதான காலத்தில் நம் அருகில் இருந்து ஒருவர் கவனித்துக் கொள்ளவும், அன்பாய், ஆதரவாய் பேசுவதற்கு ஒரு ஜீவன் அவசியம் என்பதற்காகவும் நடத்தப்படும் திருமண பந்தமானது, இளமையை கடந்து முதுமையில் உதிர்வது பேராபத்து… இதை தடுக்க சட்டங்கள் வராது… மனம் விட்டு பேசினாலே மண முறிவுக்கு எண்ட் கார்டு போடலாம்… இல்லாவிட்டால் ‘எங்கே செல்லும் இந்தப்பாதை’ என பாடிக் கொண்டே செல்ல வேண்டியதுதான்…!
* ஈகோ காரணமா?
திருமணமாகி 20 ஆண்டுகளை தாண்டியவர்களின் மண முறிவுக்கு ஈகோவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சில முக்கிய விஷயங்களில், யார் இறுதி முடிவு எடுப்பது என்கிற நிலையில், தம்பதியரிடையே ஈகோ எழும்பி, அது கிரே டைவர்ஸ் வரை கொண்டு வருகிறது. முதிர்ச்சி நிலையில் இருவருமே இருப்பதாக எண்ணிக் கொள்வதே இதற்கு முதன்மை காரணம்.
* லைக் போட்டது ஒரு குத்தமாயா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வலைத்தளத்தில் ஒரு கிரே டைவர்ஸ் போஸ்டுக்கு பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் லைக் போட்டு விட்டார். அவ்வளவுதான்… ‘ஆஹா… தலைவன் லைக் போட்டாப்ல… ஐஸ்வர்யா ராயை டைவர்ஸ் பண்ண போறாப்ல…’ என பாலிவுட் பத்திக்கிச்சு… ஆனால், இதுவரை இருவரும் இணைந்தே வாழ்வதாக கூறி வந்தாலும் பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன்தான் வருகிறார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல நாட்கள் ஆகிறது.
* புகழுக்கான சாபம்
பெயர் வெளியிட விரும்பாத ஒரு நடிகை கூறுகையில், ‘சமூகத்தில் புகழ்பெற்றவர்களாக இருப்பது என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. நட்சத்திர தம்பதி என்றால், அவர்களின் சின்னச்சின்ன அசைவுகளைக்கூட மக்களும், ரசிகர்களும், ஊடகங்களும் அன்றாடம் கவனித்து வருவது வாடிக்கையாகி விட்டது. சிறிய கருத்து வேறுபாடு கூட, நாளடைவில் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் போய் முடிகிறது.
இது திரைத்துறையில் பெற்ற புகழுக்கான சாபம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். எத்தனையோ துறைகளில் விவாகரத்து செய்திகள் வெளியில் தெரியாமல் இருந்து வரும் நிலையில், திரையுலகிலுள்ள பிரபலங்களின் வீட்டில் நடக்கும் பிரச்னைகள் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பொதுமக்களையும் மற்றும் பொழுதுபோக்கு துறையையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாததுதான்’ என்றார்.
* குறைந்த விவாகரத்து இந்தியா ‘நம்பர் 1’
கடந்த 2002ல் உலகிலேயே அதிக விவாகரத்து நடந்த நாடு என்ற கின்னஸ் சாதனையை மாலத்தீவு படைத்திருக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் ஆயிரம் பேருக்கு 10.97 சதவீதம் பேர் விவாகரத்து செய்துள்ளனர். இப்பவும் மண முறிவில் நாங்கதான் நம்பர் ஒன் என்கிறது மாலத்தீவு. உலகளவில் குறைந்தளவு விவாகரத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. (காலரை ஏத்தி விட்டுக்கலாமா). இங்கு ஆயிரம் பேருக்கு 0.01 பேர் என்ற அளவில்தான் இருக்கிறது.
* அதென்ன கிரே டைவர்ஸ்?
இளம் வயதில் விவாகரத்து ஏற்படுவது சகஜமாகி விட்ட சூழலில், இதெல்லாம் அவுட் ஆப் பேஷன்… இப்ப இளமையில் ஒற்றுமையுடன் இருந்து, முதுமையில் பிரிவதுதான் டிரெண்டே என்கிற ஒரு கலாச்சாரம் வைரலாவதுதான் கிரே டைவர்ஸ். அதாவது, நம் முடியானது கருமையை இழந்து, ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்டைலில், வெண்மை + கருமை ஆக்கிரமிக்கும் வயதான பருவத்தில் செய்யப்படும் விவாகரத்து என்பதால், இதற்கு கிரே டைவர்ஸ் எனப்பெயர். ‘வாலிபத்தில் வருவது காதல் அல்ல.. வயதானாலும் தொடர்வது தான் காதல்’ என்று டயலாக் பேசினால், ‘டிரெண்ட் தெரியாம பேசாதே… ஓடிப்போய்ரு…’ என்கிறது ஒரு கூட்டம்.
* ஹாலிவுட், பாலிவுட்டிலும் சர்வசாதாரணம்
கோலிவுட்டை போல் பாலிவுட், ஹாலிவுட்டிலும் விவாகரத்து சர்வசாதாரணம்தான். பாலிவுட், ஹாலிவுட்டில் திருமணம் செய்யும் நட்சத்திரங்களும் வெகு காலத்துக்கு பயணிப்பது இல்லை. ஹாலிவுட்டில் சராசரியாக ஒரு நட்சத்திர ஜோடி 4 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
* எந்த காரணத்துக்காக விவாகரத்து கோரலாம்
சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன என பார்க்கலாம்.. திருமணத்திற்கு பின் தம்பதியர் பிரிவதாக முடிவெடுப்பதற்கு பரஸ்பர சம்மதம் மிகவும் அவசியம். குறைந்தது, ஒரு வருடமாவது சட்டப்படி தம்பதி பிரிந்திருக்க வேண்டும். உடல், மனரீதியாக உளைச்சல் தருதல், வெளிநபருடன் தவறான உறவுமுறை, இணைந்து வாழ விருப்பமின்றி பிரிந்திருத்தல், மனநலம் பாதிப்பு, தொழுநோய், பாலியல் தொற்று நோய், துறவு நிலை, கணவர் / மனைவி சுமார் 7 ஆண்டுகளாக எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் உயிரிழந்ததாக கருதுதல், 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெறுதல், உடலுறவில் ஆர்வமின்மை, முறைகேடான உறவு முறைகள் உள்ளிட்ட காரணங்களை கூறி விவாகரத்து கோரலாம்.
* சின்ன சின்ன நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பு
உளவியல் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘மற்ற துறையினருக்கும், திரைத்துறையினருக்குமான உலகம் வெவ்வேறாக இருக்கிறது. புகழ் வெளிச்சம் அவர்கள் மீது விழ ஆரம்பித்த பின்பு, அவர்களது சின்னச்சின்ன நடவடிக்கைகளும் மற்றவர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர்களும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களே என்ற எண்ணம், அவர்களது ரசிகர்களுக்கே கூட இருப்பதில்லை. நட்சத்திரங்கள் என்பதால், அவர்களை வானத்தில் வைத்து பார்த்து ஆச்சரியம் அடைகின்றனர். நடிகர்களின் உலகத்தை உடனடியாகப் புரிந்துகொள்ளும் பெண் மனைவியாக அமைவது எல்லாம் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுவாக, திரையுலகினர் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடாதது மட்டுமின்றி, அவர்கள் எப்போதும் பாதுகாவலர்கள் சூழவும் அல்லது உதவியாளர்கள் குழுவுடனும் தனிப்பட்ட ஒரு உலகில் சஞ்சரிக்கின்றனர். ஒரு பிரபல நடிகராலோ அல்லது முன்னணி நடிகையாலோ, வீட்டில் இருப்பவர்களுக்கு சின்னச்சின்ன சந்தோஷங்களையும் அளிக்க முடிவதில்லை. இந்த ஏக்கம் நாளடைவில் கருத்து வேறுபாடாக மாறி, தீவிர மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்கள் விவாகரத்து பெற இவ்வளவும் முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன’ என்றார்.
* எலிசபெத் டெய்லருக்கு 8 கல்யாணம்… 7 விவாகரத்து…
லண்டனை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். 1932, பிப். 21ம் தேதி பிறந்த இவர், 2011 மார்ச் 23ம் தேதி மறைந்தார். இவரது முதல் திருமணம் 18 வயதில் நடந்தது. கடைசி திருமணம் 60 வயதில் நடந்தது. இவர் 8 முறை திருமணம் செய்துள்ளார். 7 பேரை விவாகரத்து செய்துள்ளார். கணக்கு இடிக்குதோ? ரிச்சர்ட் பர்டன் என்பவரை 2 முறை மணம் முடித்து, 2 முறையும் விவாகரத்து செய்துள்ளார்.
* ஏ.ஆர்.ரஹ்மான் வக்கீல் சொல்வது என்ன?
ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் வந்தனா. இவர் விவாகரத்து வழக்குகளில் வாதாடுவதில் முன்னிலையில் உள்ளவர். இவர் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘திரைத்துறையில் இருப்பவர்களின் வாழ்க்கை சாமானியர்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர்களுக்கு ஏற்படும் துரோக மனப்பான்மையால் விவாகரத்து ஏற்படவில்லை. ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக திருமண உறவில் முறிவு ஏற்படுகிறது.
அவர்கள் தங்களது திருமண வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள்; இதன் காரணமாக அவர்கள் சலிப்படைகிறார்கள்; அந்த சலிப்பைத் தவிர்ப்பதற்காக மற்றொரு திருமணத்தை நோக்கி செல்கிறார்கள். ஆனால், இதுபோன்ற திருமண முறிவுகள், சாதாரண மக்களின் வாழ்க்கையில் அரிதாகவே நடக்கிறது. திரைத்துறையில் இருப்பவர்களின் பாலியல் ஆசைகள் சாதாரண மக்களை விட அதிகமாக உள்ளது. மற்றொரு நபருடன் (ஆண் அல்லது பெண்) நேரத்தை செலவிடுவது அல்லது அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை விரும்புகிறார்கள்.
எனக்கு பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும், எனக்கு வரும் வழக்குகளின் அடிப்படையில் இந்த கருத்தை சொல்கிறேன். மற்றொரு பிரச்னை என்னவென்றால், அவர்களின் திருமண வாழ்க்கையில் தொடர்புடைய மாமியார் அல்லது அவர்களுக்கு நிதி உதவி செய்யும் குடும்ப உறுப்பினர்களில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கணவன் வீட்டில் சிங்கமாக இருந்தாலும், தந்தையின் முன் பூனையாக மாறிவிடுகிறார். பெரும்பாலும் வாரிசு திரை பிரபலங்கள் மத்தியில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
* 31 திருமண மன்னன் 11 ஆண்டு 19 நாட்கள் வாழ்க்கையும்…
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தவர் பிரபல தொழிலதிபர் கிளையன் உல்ப். 1908ம் ஆண்டு பிறந்த இவர், 18 வயதில் மார்கி மெக்டொனால்டு என்பவரை முதன்முறையாக திருமணம் செய்தார். கடைசி திருமணம் நடந்தது 1996ம் ஆண்டு. மனைவி பெயர் லிண்டா. அடுத்த ஆண்டே(1997) உல்ப் உயிரிழந்தார். கின்னஸ் சாதனைப்படி, 31 திருமணம் செய்து உள்ளார்.
இவர்களில் 3 பேரை, விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்துள்ளார். (90 கிட்ஸ் கவனிக்க). பெரும்பாலும் விவாகரத்து செய்தே திருமணம் புரிந்ததால், இவர் சுமார் 30 முறை விவாகரத்து செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. குறைந்தபட்சமாக ஒரு பெண்ணுடன் 19 நாட்கள், அதிகபட்சமாக ஒரு பெண்ணுடன் 11 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளார்.
The post கோலிவுட்டில் அடுத்தடுத்து பிரியும் பிரபலங்கள்: சினிமா நட்சத்திரங்களின் வினோத வைரஸ்… டைவர்ஸ்! ரசிகர்களின் மனநிலையில் திடீர் மாற்றம் appeared first on Dinakaran.