×
Saravana Stores

உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை: ஆழியாற்றின் குறுக்கே ஆய்வு பணிகள் துவங்கியது

பொள்ளாச்சி: ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆய்வு பணிகள் துவங்கி உள்ளது. பொள்ளாச்சியை அடுத்த காளியப்ப கவுண்டன்புதூர்(கா.க.புதூர்) மற்றும் ஆத்து பொள்ளாச்சி கிராமத்தில் சுமார் 3500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் கா.க.புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமான, மீன்கரை ரோட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஆழியாற்றில் குறுக்கே சுமார் 250 மீட்டர் நீளம்,சுமார் 15 அடி அகலத்தில் தரைமட்ட பாலம் அமைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் சென்று வருகிறது.மேலும், மக்கள் நடந்து செல்லும் முக்கிய வழித்தடமாக அமைந்துள்ளது.ஆனால், கா.க.புதூர் மற்றும் அதனை அடுத்த ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்துக்கு செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாற்றில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. பகல் மற்றும் இரவு நேரத்தில் அந்த வழியாக வாகன போக்குவரத்து இருப்பதால், சில நேரங்களில் கனரக வாகனங்கள் தரைமட்டபாலத்தில் வேகமாக வரும்போது,பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், ஆழியாற்றில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கும் போது பாலத்தை தொட்டு வெள்ளப்பெருக்கு செல்கிறது. இந்த தரைமட்ட பாலமானது தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால், பருவ மழைக்காலங்களில் ஆழியாற்றில் தண்ணீர் அதிகளவு வரும்போது இந்த தரைமட்ட பாலமானது மூழ்கி விடுவதுடன், அந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அந்நேரத்தில், கா.க.புதூர் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்துக்கு, அம்பராம்பாளையம் அல்லது நல்லூத்துக்குளி வழியாக சுமார் 5 கி.மீ தொலைவு வரையிலும் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆத்துப்பொள்ளாச்சி மற்றும் கா.க.புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இருப்பதால், இந்த இந்த தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து,பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைக்காலத்தில் போக்குவரத்து தடைப்படுவதை தவிர்க்க, அதன் அருகேயே உயர்மட்ட பாலம் கட்ட, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த தரைமட்ட பாலம் அருகேயே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கா.க.புதூர் கிராம மக்கள் எண்ணியிருந்தனர்.ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.மேலும், இந்த வழித்தத்தில் உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கான தொகை கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால், இதற்கு பதிலாக, வேறு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் கா.க.புதூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆழியாற்றை கடக்கும் தரைமட்ட பாலத்தை அப்புறப்படுத்தி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி விரைவில் மேம்பால பணி மேற்கொள்வதற்கான ஆய்வு பணி அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்லையில், பொள்ளாச்சி திமுக எம்பி ஈஸ்வரசாமி நேற்று முன்தினம்,ஆத்துப் பொள்ளாச்சியிலிருந்து கா.க.புதூர் செல்லும் வழியில் ஆழியாற்றை கடந்து செல்லும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றுவது குறித்து, வரைபடம் வைத்து ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அவர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்டறிந்து, விரைந்து மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய திமுக செயலாளர்கள் வக்கீல் தேவசேனாதிபதி, ஜூமாலயா யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை: ஆழியாற்றின் குறுக்கே ஆய்வு பணிகள் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Kaliyappa Kauntanbutur ,K.K. Putur ,Athu Pollachi ,K.K.Pudur village ,
× RELATED பொள்ளாச்சியில் நள்ளிரவில் சடலத்தை புதைத்த மர்ம நபர்கள்