×

ஸ்ரீமுஷ்ணம் அருகே பரிதாபம் பூ பறிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

 

ஸ்ரீமுஷ்ணம், நவ. 8: ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி அம்மன் குளம் உள்ளது. இந்த குளத்தில் தாமரை பூக்கள் உள்ளதால் அதனை கடலூரை சேர்ந்த கண்ணுசாமி என்பவர் குத்தகை எடுத்து பூக்களை பறித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாலை கண்ணுசாமியுடன் பணிபுரியும் குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி குளத்துமேட்டு தெருவை சேர்ந்த பணியாளர் பாலகிருஷ்ணன்(45) தனது இருசக்கர வாகனத்தை குளம் அருகே நிறுத்திவிட்டு, குளத்தில் இறங்கி பூ பறிக்க சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் தனது கணவர் பாலகிருஷ்ணன் வராததால் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இதனால் இவரது மனைவி வசந்தி அருகிலுள்ள அன்பரசு என்பவரிடம் தகவல் தெரிவித்து அங்கு சென்று பார்த்து வரும் படி கூறியுள்ளார். இதையடுத்து அன்பரசு அங்கு சென்றபோது பாலகிருஷ்ணன் டயர் டியூப்பை பயன்படுத்தி பூ பறிப்பது வழக்கம். ஆனால் டயர் டியூப் மட்டும் தண்ணீரில் மிதந்திருந்தை கண்டு சந்தேகம் அடைந்து அவரது மனைவி வசந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தி இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் தீயணைப்பு துறை அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடும்போது, பாலகிருஷ்ணனை சடலமாக மீட்டனர். இதையடுத்து சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஸ்ரீமுஷ்ணம் அருகே பரிதாபம் பூ பறிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Paritapam ,Srimushnam ,Meenakshi Amman ,Dethampattu ,Kannuswamy ,Cuddalore ,
× RELATED சபரிமலை சீசன் காரணமாக மீனாட்சியம்மன் கோயிலில் அலைமோதும் கூட்டம்