×
Saravana Stores

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 2025ம் ஆண்டு, கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதல்வரால் 26.01.2025 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கவுரவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...