×
Saravana Stores

மாவட்டத்தில் இதுவரை 4.45 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை

கிருஷ்ணகிரி, அக்.21: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை 4.45 லட்சம் குடும்பங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 23.7.2009ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் ஒருங்கிணைந்து, கடந்த 23.9.2018ம் தேதி முதல் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 1513 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் அளிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாத் திட்டத்தின் மூலம், 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 27 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 4,45,021 காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2023-24ம் ஆண்டிற்கு மட்டும் 6,495 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை 57,591 நபர்களுக்கு ₹89 கோடியே 49 லட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ₹1.20 லட்சம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று (₹1.20 லட்சம் மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.32ல் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை வழங்கிய 4 மருத்துவமனைகள், 4 காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள், 2 வார்டு மேலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ கிசிச்சைகள் பெற்ற 3 பயனாளிகளுக்கு பரிசுகள், 5 பயனாளிகளுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து, 5 பயனாளிகளுக்கு தலா ₹5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு அட்டைகளையும், விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக மருத்துவ சிகிச்சை வழங்கிய தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைகள், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீசந்திரசேகரா மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகள், 4 காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள், 2 வார்டு மேலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் தர்மா, மாவட்ட திட்ட அலுவலர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்) ராஜேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் இதுவரை 4.45 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Chief Minister ,Karunanidhi ,Jan Arogya ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...