*செல்போன் திருடி சிக்கியதால் முடிவு
தேன்கனிக்கோட்டை : அஞ்செட்டி அரசு விடுதியில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் அரசு எஸ்சி.,எஸ்டி மாணவர் விடுதி உள்ளது. மலை பகுதி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 60 பேர் தங்கி அருகில் உள்ள அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதி வார்டனாக முருகன் என்பவர் உள்ளார். மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி கெஸ்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கிரேன்(15) என்ற மாணவன் விடுதியில் தங்கி அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் உணவு சாப்பிடச் சென்றபோது கிரேன் அறையிலேயே இருந்தான். அதன்பிறகு உடனிருந்த மாணவர்கள் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கிரேன் அறையிலிருந்த பேனில் தூக்கில் தொங்கினான். இதை பார்த்த மாணவர்கள், வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கிரேனை மீட்டு அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் போலீசார் மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விடுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கி படிக்கும் மற்றொரு மாணவனின் செல்போன் ஒன்று காணாமல் போனது. அதை கிரேன் திருடிச்சென்றதாக தெரிகிறது. ஆயுதபூஜை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் விடுதிக்கு சென்றபோது கிரேனிடம் வார்டன் மற்றும் ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். இதுகுறித்து அவனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளனர்.
செல்போனை திருடி மாட்டிக்கொண்டதால், பயத்தில் இருந்த கிரேன் மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் திருடிய சம்பவத்தில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஞ்செட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அஞ்செட்டியில் பரபரப்பு அரசு விடுதியில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கில் தற்கொலை appeared first on Dinakaran.