கோவை, அக். 5: கோவை மாவட்டத்தில் 1,253 முழுநேர நியாயவிலைக்கடைகள், 289 பகுதி நேர நியாய விலை கடைகள் மொத்தம் 1,542 நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன. 11 லட்சத்து 41 ஆயிரம் 886 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு 34 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், மத்துவராயபுரம் நியாயவிலைக்கடையில் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வழங்கி வருவதாக புகார் எழுந்தது.
தவிர, அந்த பகுதியில் போலி ரேஷன் கார்டுகள் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புகார் தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் உண்மை இல்லை என கண்டறிந்துள்ளனர். மேலும், மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டு என்பது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: போலி ரேஷன் கார்டு புகார் தொடர்பாக விசாரித்த போது, போலி கார்டுகள் இல்லை என தெரியவந்தது. ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கைவிரல் ரேகையின் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.
தவிர, சிலருக்கு கைரேகை பதிவு வைக்க முடியாத நிலையில், அவர்களது கண் கருவிழி ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் யார் வேண்டும் என்றாலும் ரேஷன் கடையில் சென்று கை ரேகை பதிவு செய்து பொருட்களை பயன்படுத்தி வாங்க முடியும். இதில், முறைகேடுகள் செய்ய முடியாது. மேலும், தற்போது ரேஷன் கடைகளில் பருப்பு, பாமயில் போன்றவை தட்டுப்பாடு இல்லை. அனைத்து பொருட்களும் சீராக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டு இல்லை appeared first on Dinakaran.