சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக போர்மேன் கைதானார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை அடுத்த குகன்பாறையில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பட்டாசு மூலப்பொருள்கள் ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ வந்தது. அதில் இருந்த மூலப்பொருட்களை செவல்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(25) இறக்கி ஒரு அறையில் வைத்து கொண்டிருந்தார்.
அப்போது மருந்து உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. தொழிலாளி கோவிந்தராஜ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி திருத்தங்கல்லை சேர்ந்த குருமூர்த்தி(20) படுகாயமடைந்தார். தகவல் அறிந்து ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து கோவிந்தராஜின் உடலை மீட்டனர். படுகாயமடைந்த குருமூர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளரான பாலமுருகன், போர்மேன் கபில் ராஜ் ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து கபில்ராஜை கைது செய்தனர். உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.
* உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: பட்டாசு ஆலை வெடி விபத்தில் கோவிந்தராஜ் (27) உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், நூறு சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி (19) என்பவருக்கு ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
The post பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி: ஒருவர் படுகாயம்; போர்மேன் கைது appeared first on Dinakaran.