- சென்னை
- நீதிமன்றம்
- கிருஷ்ணன்
- அம்பத்தூர் விஜயலக்ஷ்மிபுரதம்
- சென்னை பெருநகர்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தொலைத்தொடர்பு
சென்னை: செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக, உயர் நீதிமன்ற பெண் நீதிபதியை மிரட்டிய மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (31). இவர் சென்னை பெருநகர காவல்துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், நான், உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 1ம் தேதி நீதிபதியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், ‘‘நான் தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்ணை தவறாக சட்டவிரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தி உள்ளீர்கள். இது தொடர்பாக மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.
பிறகு மற்றொரு நபர் நீதிபதியை, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, ‘‘மும்பை அந்தேரி காவல் நிலைய அதிகாரி பேசுகிறேன். உங்களது ஆதார் எண்ணை கூறுங்கள்,’’ என மிரட்டியுள்ளார். உடனே பெண் நீதிபதி, காவல் நிலையத்தில் கூறிவிட்டு வருகிறேன் என்று பேசியதும், அந்த மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார்.எனவே பெண் நீதிபதியை ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி பெண் நீதிபதியை தொடர்பு கொண்ட மர்ம நபர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு மிரட்டல்: தொலைதொடர்பு ஆணையத்திலிருந்து பேசுவதாக கூறிய மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.