×
Saravana Stores

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆட்டோ டிரைவர் கொலையில் திடுக் தகவல்கள்: 6 பேரிடம் விசாரணை


வேளச்சேரி: சென்னை வேளச்சேரி அருகே பெரும்பாக்கம், எழில் நகர், 102வது பிளாக்கை சேர்ந்தவர் ஜெயராஜ் (எ) ராஜன் (25). ஆட்டோ டிரைவர். மேலும், கானா பாடல் பாடுவார் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த ஓராண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, தற்போது இங்கு தனது தாய் லட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்க செல்வதாக தாயிடம் கூறிவிட்டு பெசன்ட்நகருக்கு ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் வந்துள்ளார். பின்னர், அன்று நள்ளிரவு 1 மணியளவில் பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் கத்திரிக்கோல் மற்றும் பீர்பாட்டிலால் சரமாரி குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு ஆட்டோ டிரைவர் ஜெயராஜின் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் ஜெயராஜை யார், எதற்காக கொலை செய்தனர் என சிசிடிவி காமிரா மற்றும் அவரது செல்போன் பதிவுகளை தீவிரமாக விசாரித்தனர். அவரது செல்போன் பதிவில், ஓட்டேரியை சேர்ந்த பெண்ணுடன் அவர் கடைசியாக பேசியிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அப்பெண்ணை காவல் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்க அம்பத்தூர், ஓட்டேரி ஆகிய 2 பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அங்கு ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர்கள் அறிமுகமானவர்கள் என்பதால், ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் கானா பாடல் பாடியுள்ளார்.

அதே சமயம் அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்களும் தனியே கானா பாடல்களை பாடியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கு இடையே போட்டி ஏற்பட்டதில், தகாத வார்த்தைகளில் பாடி கிண்டலடித்து உள்ளனர். இதில் இருதரப்பினருக்கு இடையே வாய்த்தகராறு முற்றியதில் கோஷ்டி ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமான அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள், கானா பாடிய ஆட்டோ டிரைவர் ஜெயராஜை கத்திரிக்கோல் மற்றும் பீர்பாட்டிலால் சரமாரி குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர் என்று போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார், ஓட்டேரி மற்றும் அம்பத்தூர் பகுதிகளை சேர்ந்த 6 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து, பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து, ஆட்டோ டிரைவர் கொலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

The post பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஆட்டோ டிரைவர் கொலையில் திடுக் தகவல்கள்: 6 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Besantnagar ,VELACHERY ,JAYARAJ (A) RAJAN ( ,102ND BLOCK NEAR VELACHERY, ELIL NAGAR, CHENNAI ,Ghana ,
× RELATED தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி...