நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த கால்இறுதி போட்டியில் 2ம் நிலைவீராங்கனையான பெலாராசின் 26 வயதான அரினா சபலென்கா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், 7ம் நிலை வீராங்கனையுமான 21 வயது கின்வென் ஜெங் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6-2 என எளிதாக வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். முன்னதாக நேற்றிரவு நடந்த மற்றொரு கால் இறுதியில் 13வது ரேங்க்கில் உள்ள அமெரிக்காவின் 23 வயதான எம்மா நவரோ, 26வது நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.
இதில் நவரோ 6-2,7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் கால்இறுதியில் தரவரிசையில் 12வதுஇடத்தில் உள்ள அமெரிக்காவின் 26 வயதான டெய்லர் ஃபிரிட்ஸ் , 7-6,3-6,6-4,7-6 என்ற செட் கணக்கில், 4ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வென்றார். இன்று காலை நடந்த மற்றொரு கால் இறுதியில், 20ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, 6ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மோதினர். இதில் தியாஃபோ, 6-3, 6-7,6-3 என முதல் 3 செட்டில் 2ஐ கைப்பற்றினார். 4வதுசெட்டில் 4-1 என முன்னிலையில் இருந்த போது, காயம் காரணமாக கிரிகோர் டிமிட்ரோவ் வெளியேறினார். இதனால் தியாஃபோ, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.