×

துரந்த் கோப்பை கால்பந்து முதல் முறையாக நார்த்ஈஸ்ட் சாம்பியன்

கொல்கத்தா: துரந்த் கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் அணியை வீழ்த்திய நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய ராணுவத்தின் சார்பில் நடைபெறும் துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 133வது தொடர் ஜூலை 27ம் தேதி தொடங்கியது. போட்டிகள் கொல்கத்தா, கோக்ராஜ்ஹர், ஷில்லாங், ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் நடந்தன.

மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் மோகன் பகான் எஸ்ஜி – நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணிகள் பைனலுக்கு முன்னேறின. துரந்த் கோப்பையை 17 முறை வென்றுள்ள நடப்பு சாம்பியனான மோகன் பகான் அணி 30வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடியது. அதே சமயம் ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமான நார்த்ஈஸ்ட் அணி, துரந்த் கோப்பையில் நேற்று முதல் முறையாக பைனலில் களமிறங்கியது. தொடக்கத்தில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி நார்த்ஈஸ்ட்டை திணற வைத்த மோகன் பகான் அடுத்தடுத்து 2 கோல் போட்டு 2-0 என முன்னிலை பெற்றது.

அந்த அணியின் கம்மிங்ஸ் (11வது நிமிடம்/பெனால்டி), சாஹல் (45+5’) கோல் போட்டு அசத்தினர். எனினும், 2வது பாதியில் கடும் நெருக்கடி கொடுத்த நார்த்ஈஸ்ட் அணிக்கு அஜாரையே (55வது நிமிடம்), கில்லர்மோ (58’) கோல் அடித்து 2-2 என சமநிலை ஏற்படுத்தினர். விறுவிறுப்பான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கபட்டது. அதில் நார்த்ஈஸ்ட் 4-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று முதல் முறையாக துரந்த் கோப்பையை முத்தமிட்டது.

The post துரந்த் கோப்பை கால்பந்து முதல் முறையாக நார்த்ஈஸ்ட் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Durant Cup Football ,Northeast ,KOLKATA ,Northeast United FC ,Mohan Baghan ,Indian Army ,Dinakaran ,
× RELATED சென்னையில் வடகிழக்கு பருவ...