×
Saravana Stores

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதும் சென்னையில் மழை பாதிப்பு உள்ள இடங்களை அடையாளம் கண்டு, வடிகால் சீரமைப்பு மற்றும் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், தற்போது சென்னை மாநகராட்சியானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது உள்ளிட்டவை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அதோடு குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், ரயில்வே துறை, பிஎஸ்என்எல் உள்ளிட்ட சேவை துறைகளும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. இதேபோல், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பருவ மழையின்போது, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் நீர்நிலைகளை தூர்வாரி, சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீர்நிலை அருகே கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கட்டுமான பணியின்போது வெளியேற்றப்படும் கட்டிட கழிவுகளை பலர் சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக புகார் எழுந்து வருகிறது. கட்டிட கழிவுகளை கொட்டுவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், மழை பெய்யும்போது மழைநீருடன் சேர்ந்து சாலையில் கட்டிடக் கழிவுகள் தேங்கிவிடுகின்றன. மழைநீருடன் கட்டிட கழிவுகள் தேங்கி வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக அடைத்துக் கொள்கின்றன.

இதனை தடுக்கும் வகையில், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர பொது இடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில், கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மற்றும் கண்காணிக்க 3 ரோமிங் குழுக்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. மாநகராட்சி முழுவதும் இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்படும். வடகிழக்கு பருவமழையின் போது அதீத மழையால் வெள்ளம் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon ,CHENNAI ,Disaster Management Department ,Northeast ,Monsoon ,Chennai Corporation ,DMK Govt ,
× RELATED வடகிழக்கு பருவமழை வெள்ளத்திலிருந்து...