சென்னை: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சை ஆர்வமாக எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் கான்பூரில் செப். 27ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து குவாலியர், டெல்லி, ஐதராபாத்தில் (அக். 6, 9, 12) டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த வங்கதேச அணி, அதே உற்சாகத்துடன் இந்திய அணியின் சவாலை சந்திக்கிறது.
இந்திய அணியும் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளதால், வங்கதேசத்துடனான டெஸ்ட் தொடரில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த நிலையில், சென்னையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர். முன்னணி பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி தனது பேட்டிங் பயிற்சிக்காக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அனுபவ சுழல் அஷ்வின் இருவரையும் பந்துவீச வைத்து மிகக் கவனமாக பயிற்சி செய்தார். முதலில் கோஹ்லி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால்… அவர்களைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் ஷர்மா, ஷுப்மன் கில், சர்பராஸ் கான் ஆகியோர் பேட்டிங் செய்தனர். ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் உள்ளூர் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பயிற்சி செய்தனர்.
The post பும்ரா வேகத்தை எதிர்கொண்ட கோஹ்லி appeared first on Dinakaran.