×

மாவட்டத்தில் புதிதாக 7 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் கலெக்டர் பிருந்தாதேவி தகவல்

சேலம், ஆக.30: சேலம் மாவட்டத்தில் புதியதாக 7 வாக்குச்சாவடிகள் உருவாக்க வேண்டும் என்று வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை பகுப்பாய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. அதன்படி, அரசியல்கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் ஆகியோரிடம் இருந்து வாக்குச்சாவடிகள் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் பெறுவதற்கு வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த 11 தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் பிருந்தாதேவி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள 3,257 வாக்கு சாவடிகளை ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில் தேவைக்கேற்ப புதியதாக 7 வாக்கு சாவடிகள் உருவாக்கம் செய்யப்படும். 39 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்ய வேண்டும். 10 வாக்குச்சாவடிகளை புதிய இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். 19 வாக்குச்சாவடிகளை கட்டிட மாற்றம் செய்யவும் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

வாக்காளர் பதிவு அலுவலர்களின் பரிந்துரையின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருப்பினும், மேலும் புதிய ஆலோசனைகள் இருப்பின் அதனை எதிர்வரும் செப்டம்பர் 4ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரிடம் அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகள், ஆலோசனைகள் வரப்பெறும் பட்சத்தில் அவை இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு பரிசீலனை செய்து இறுதி செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்படும்.

மேலும் 1.1.2025ம் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29ம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். இதன்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நான்கு தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திடலாம்.

17வயது நிரம்பிய நபர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 பூர்த்தியாகும் அடுத்த காலாண்டில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி தற்போது 100 சதவீதம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்படி கணக்கெடுப்பிற்கு வரும்போது பொதுமக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் உட்பட தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

The post மாவட்டத்தில் புதிதாக 7 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் கலெக்டர் பிருந்தாதேவி தகவல் appeared first on Dinakaran.

Tags : Collector ,Brindadevi ,Salem ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED மதுரையில் விடுதிகளை மீறிய கட்டடங்கள்...