- அதிமுக மாவட்டம்
- சமாஜ்வாடி
- கள்ளக்குறிச்சி
- எம்.ஜி.ஆர்
- ஈஸ்வரன் கோயில் தெரு, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்
- தின மலர்
கள்ளக்குறிச்சி: எம்பி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.60 கோடி மோசடி செய்ததாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது அதே கட்சி நிர்வாகி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன்(55). வழக்கறிஞர். இவர் மனைவி மற்றும் நண்பர்களுடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறேன். அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது போடப்பட்ட 9 வழக்குகள் மற்றும் 2022ல் உளுந்தூர்பேட்டையில் அமையவுள்ள திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில் கட்டப்பட்டு வரும் வெங்கடேசபெருமாள் கோயில் வழக்குவரை அனைத்து வழக்கிலும் ஆஜராகி பணம் வாங்காமல் வழக்கை முடித்து கொடுத்தேன்.
இந்நிலையில், கடந்த 22.1.2024ம் தேதி மாவட்ட செயலாளர் குமரகுரு 2024 நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தனி தொகுதிக்கு உன்னை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு பரிந்துரைத்து சீட் வாங்கி தருகிறேன் என்றும், அதற்கு ரூ.2 கோடி தயார் செய்யும்படியும் தெரிவித்தார். அதன்படி 3 தவணையாக மொத்தம் ரூ.1.60 கோடி கொடுத்தேன். விழுப்புரம் எம்பி சீட் உறுதி செய்யப்பட்டால் மீதமுள்ள ரூ.40 லட்சம் கொடுக்கிறேன் என தெரிவித்து இருந்தேன். மார்ச் 20ம் தேதி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லாமல் வேறு நபர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால் குமரகுரு திட்டமிட்டு நம்பவைத்து ஏமாற்றியது தெரியவந்தது. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதற்கு என்னை தாக்கினார். எனது ரூ.1.60 கோடி பணத்தை பெற்று தர வேண்டும். என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டால் குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ்(எ) நமச்சிவாயமும் தான் பொறுப்பாவார்கள். இவ்வாறு கூறியிருந்தார்.
கட்சியில் இருந்து நீக்கம்: கட்சி கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆ.கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசூர் சிவா (எ) சிவக்குமார் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
The post எம்பி சீட் தருவதாக கூறி ரூ.1.60 கோடி சுருட்டிய அதிமுக மாவட்ட செயலாளர்: எஸ்பியிடம் சொந்த கட்சி நிர்வாகி குடும்பத்துடன் புகார் appeared first on Dinakaran.