×
Saravana Stores

ஊத்துக்காடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: ஊத்துக்காடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இதனால் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகி வருகிறது.

வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம், ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், இ-சேவை மையம், தபால் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், புகழ்பெற்ற எல்லை அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில், ஊத்துக்காடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தற்போது இந்த கட்டிடம் முழுமையாக சிதிலமடைந்து செயல்பட முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே நோயாளிகள், கர்ப்பிணிகள் இங்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இதுபோன்ற நிலையில் அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சி மட்டுமின்றி புத்தகரம், நாயக்கன் குப்பம், சின்னிவாக்கம், மருதம், பிள்ளையார் குப்பம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தற்போது செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இட நெருக்கடியால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், புகழ்பெற்ற எல்லை அம்மன் கோயில் இங்கு உள்ளது. இங்கு நாள்தோறும் சென்னை, செங்கல்பட்டு, பெரும்புதூர், மதுராந்தகம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடியாக சிகிச்சை பெற இங்கு வர முடியவில்லை.

மேலும் அருகாமையில் உள்ள குளத்தில் குளிக்கச் செல்லும் பக்தர்கள் அவ்வப்போது உயிரிழக்கும் சூழல் உள்ளது. இது போன்ற நிலையில் முதலுதவி செய்யக்கூட இங்கு எந்த மருத்துவமனையும் இல்லை. இங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர சிகிச்சை மருத்துவமுகாம் தொடங்கினால் இங்குள்ள பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இடிந்து விழும் நிலையில் காணப்படும் ஊத்துக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும்’ என்றனர்.

The post ஊத்துக்காடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Primary health centre ,Oputhukadu ,Walajabad ,Opukkadu ,Anganwadi Centre ,Valajabad Union ,Opukkadu Orwatchi ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் போலீஸ்காரரை தாக்கியவர் கைது