×
Saravana Stores

நெல்லை மாவட்டத்தில் இளைஞர்களை குறிவைத்து ஆபாச செயலி மூலம் பணம் பறிக்கும் கும்பல்: பரபரப்பு தகவல்கள்

நெல்லை: நெல்லையில் இளைஞர்களை குறிவைத்து ஆபாச செயலி மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயலிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. செல்போன்கள் தகவல் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. சாதாரண தேடுபொறிகள் காலாவதியாகி ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் தேடும் வசதிகள் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், செல்போன்கள் மூலம் பணம் பறிக்கும் கும்பலும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

செல்போன்களில் ‘லிங்க்’ அனுப்பி அதை சொடுக்கும் நபர்களின் வங்கித் தகவல்களை சில வினாடிகளில் திருடி பணம் பறிக்கும் வட மாநில நபர்களின் ஏமாற்று வேலைகள் போலீசாரின் தொடர் விழிப்புணர்வுகளால் குறைந்துள்ளன. அதனால் பெரும்பாலானவர்கள் ‘பரிசு விழுந்துள்ளது’, ‘கடன் தருகிறோம்’ என செல்போன் எண்களுக்கு வரும் ‘லிங்கு’களை தவிர்த்து வருவதால் அதுபோன்ற மோசடிகள் குறைந்துள்ளன. ஆனால் தற்போது உள்ளூர் நபர்களே ஆபாச செயலிகளை பயன்படுத்தி நகை, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக நெல்லை மாவட்ட போலீசார் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக நெல்லையில் நல்ல வேலைக்குச் சென்று நன்றாக சம்பாதிக்கும் இளைஞர்களை குறிவைத்து ஆபாச செயலி மூலம் ஆசைவார்த்தை கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து நகை, பணத்தை பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

நேற்று முன்தினம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தை சேர்ந்த கிறிஸ்தவ ஆலய சபை ஊழியரான ஜெபஸ்டின் ராஜ்குமார் (36) என்பவரை ஒரு கும்பல் ஆபாச செயலி மூலம் ஆசைவார்த்தை கூறி மூலைக்கரைப்பட்டி பகுதிக்கு அழைத்துள்ளது. அங்கு வைத்து அவரை தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், பைக் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி உள்ளது. அதே நாளில் இன்னோரு சம்பவமாக பாளைங்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முத்துக்கிருஷ்ணன் என்பவரையும் ஒரு கும்பல் ஆபாச செயலி மூலம் வலைவீசி உள்ளது. அந்த கும்பல் சொல்வதை நம்பி மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு பகுதிக்குச் சென்ற அவரிடம், அங்கு பதுங்கி இருந்த 3 பேர் அவரை தாக்கி செல்போன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.6,500ஐ ஜிபே மூலம் பறித்துச் சென்றது.

இதேபோல் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி, குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டரான பிரேம்ஜித் (46) என்பவரிடம் ஆபாச செயலி மூலம் அறிமுகமான சிலர் அவரை நெல்லை, தச்சநல்லூர், சிதம்பரநகர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை அவர்கள் பறித்துச் சென்றனர்.ராமையன்பட்டி, ராம்நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான காளி விக்னேஷ் (30) என்பவரிடம் ஆபாச செயலி மூலம் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அந்த நபர் மேலும் சிலருடன் சேர்ந்து காளி விக்னேஷை ஜூலை 27ம் தேதி தச்சநல்லூர் பகுதிக்கு ஆசைவார்தை கூறி வரவழைத்து, அவரிடமிருந்து 2.5 பவுன் நகையை பறித்து தப்பினார். இதுபோல், ஆபாச செயலிகள் வாயிலாக இளைஞர்களை ஆசைவார்தை கூறி பணம் பறிக்கும் கும்பல்கள் சமீபகாலமாக நெல்லையில் அதிகரித்து வருகின்றன. இதனால் நெல்லை மாவட்ட மற்றும் மாநகர போலீசார் இதுபோன்ற செல்போன் செயலிகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மோசடி வலையில் சிக்க வைக்கும் செல்போன்;
நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘செல்போன்களை பயன்படுத்திவதில் கவனம் அனைவருக்கும் தேவை. ஒவ்வொருவரின் விரும்பம் உள்ளிட்ட தகவல்களை சமூக வலைதள செயலிகள் சேகரித்து அதற்குகேற்ப விளம்பரங்களை, செயலிகளை அறிமுகமாக்கி படிப்படியாக மோசடி வலையில் சிக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் செல்போன்களை பயன்படுத்தும் போதே மனதளவில் நாம் உறுதியானவர்களாக செயல்பட்டால் மட்டுமே மோசடி பேர்வழிகளிடம் சிக்காமல் இருக்க முடியும்’’ என்றனர்.

ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கும் நபர்கள்;
ஆபாச செயலிகள் குறித்து போலீசார் கூறுகையில், ‘‘இன்றைய காலக்கட்டத்தில் ஆபாச செயலிகள் இணையத்தில் மலிந்துள்ளன. இந்த செயலிகள் மூலம் பணம் பறிக்கும் கும்பல்கள் ஓரினச்சேர்க்கைக்கு ஆசைவார்த்தை கூறி அழைப்பு விடுக்கின்றன. அந்த அழைப்பை ஏற்று அவர்கள் சொல்லும் இடத்திற்குச் செல்லும் சபலக்கார இளைஞர்கள் இதுபோன்ற ஏமாற்று கும்பல்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். இதில் தப்பிக்க இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இணைய செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.’’ என்றனர்.

The post நெல்லை மாவட்டத்தில் இளைஞர்களை குறிவைத்து ஆபாச செயலி மூலம் பணம் பறிக்கும் கும்பல்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Nella district ,Paddy ,Nelala district ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி;...