×

நிதி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் தடுத்ததால் மேற்கு வங்க முதல்வர் மம்தா வெளிநடப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் பரபரப்பு சம்பவம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது மைக் அணைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து பங்கேற்ற ஒரே தலைவரான மம்தாவும் கூட்டத்தை பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். தேசிய முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும், வளர்ச்சித் திட்டங்களில் வலுவாக தங்களை இணைத்துக் கொள்வதற்கும் நிதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். இதன் 9வது கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சரகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கெண்டனர்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டிஹிருப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த முதல்வர்கள், பிரதிநிதிகள் யாரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் ஒரே எதிர்க்கட்சி முதல்வராக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், கூட்டத்தின் பாதியிலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெளியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டத்தில் பேச எனக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. பாதியிலேயே எனது மைக் ஆப் செய்யப்பட்டு என்னை அவமதித்து விட்டனர். எனக்கு முன்பாக பேசிய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 20 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்பட்டார்.

கோவா, சட்டீஸ்கர், அசாம் முதல்வர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினார்கள். ஆனால் என்னை மட்டும் 5 நிமிடங்களுக்கு மேல் பேச விடாமல் மைக்கை அணைத்தனர். இது நியாயமற்றது. எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டும்தான் இந்த கூட்டத்தில் பங்கேற்றது எதற்காக? மாநில கூட்டாட்சியை வலுப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தினால்தான். மேலும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி நிலுவையில் இருப்பது குறித்தும் பேசுவதற்காகத்தான் கூட்டத்திற்கு வந்தேன்.

பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு அரசியல் சார்புடையது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அவர்கள் சரியான கவனம் செலுத்துவதில்லை. அதற்காகத்தான் பட்ஜெட்டிலும் அரசியல் சார்புடைய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள். சில மாநிலங்களுக்கு அவர்கள் சிறப்பு கவனம் செலுத்துவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு எதிராக ஏன் பாகுபாடு காட்டுகிறார்கள் என்று நான் கேட்டேன். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நான் எல்லா மாநிலங்களுக்காகவும் பேசுகிறேன். நிதி ஆயோக்கிற்கு நிதி ஒதுக்கும் அதிகாரங்கள் இல்லை. அதற்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் பழைய முறைப்படி திட்டக் கமிஷன் கொண்டு வரப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் கிராமப்புற வேலை உறுதி திட்டம், பிரதமர் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்கான நிதிகள் 3 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். ஒன்றியத்தில் ஆள்பவர்கள் தங்கள் கட்சிக்கும் மற்றவர்களுக்கும் இடையில் பாகுபாடு காட்டினால், நாடு எப்படி இயங்கும்? இதையெல்லாம் கேட்டால் நான் பேசுவதை நிறுத்துவீர்களா? இனி ஒன்றிய அரசின் எந்த கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்.
இவ்வாறு காட்டமாக பதிலளித்து சென்றார்.

பின்னர் கொல்கத்தா சென்றடைந்த மம்தா விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘‘என்னை பேச அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியாக மணி அடித்துக் கொண்டே இருந்தனர். இது அவமதிக்கும் செயல்’’ என்றார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* ரூ.60 ஆயிரம் கோடி தந்தும் நிதிஷ் குமார் புறக்கணிப்பு
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் இருந்து ஒன்றிய பாஜ அரசை காப்பாற்றிக் கொண்டிருப்பதால், பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தரப்பட்டது. தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்கள் குறித்து ஒருவார்த்தை கூட இடம் பெறவில்லை. பீகாருக்கு ரூ.60 ஆயிரம் கோடி வாரி இறைத்தும் பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார்.

அம்மாநிலத்தின் சார்பில் கூட்டத்தில் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா கலந்துகொண்டனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனையில் நிதிஷ் குமார் பங்கேற்றதால் நிதி ஆயோக் கூட்டத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

* பா.ஜ முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
நிதி ஆயோக் கூட்டத்தை தொடர்ந்து பாஜ ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனியாக ஆலோசனை நடத்தினார். அதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, பாஜ முதல்வர்கள் யோகி ஆதித்யநாத் (உபி), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்), மோகன் சரண் மாஜி (ஒடிசா) ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய 2ம் நாள் கூட்டத்தில் மீதமுள்ள முதல்வர்கள் பங்கேற்பார்கள்.

* காங்கிரஸ் கண்டனம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டதில் இருந்தே பிரதமர் மோடிக்கு தம்பட்டம் அடிக்கும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது. பிரதமர் அலுவலகத்தின் ஒரு அங்கமாகத்தான் நிதி ஆயோக் உள்ளது. அப்பட்டமான பாகுபாட்டுடன் செயல்படும் நிதி ஆயோக், சுதந்திரமான தொழில்முறை அமைப்பாக இல்லை. இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் நடத்தப்பட்ட விதம் ஏற்கத்தக்கதல்ல’’ என்றார்.

* வளர்ந்த மாநிலங்களே வளர்ந்த இந்தியாவாகும்
நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘நாம் சரியான திசையில் பயணிக்கிறோம். பயங்கரமான கொரோனா தொற்றுநோயை தோற்கடித்துள்ளோம். கூட்டு முயற்சியால் 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்கிற நமது கனவுகளை நிறைவேற்ற முடியும். வளர்ச்சி அடைந்த மாநிலங்களே வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும்’’ என்றார். வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3வது தேசிய மாநாட்டில் அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

* 10 முதல்வர்கள் புறக்கணிப்பு
நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர்.சுப்ரமணியம் அளித்த பேட்டியில், ‘’10 மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 26 முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, பீகார், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் பங்கேற்காததால் அவர்களுக்குதான் இழப்பு. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது மைக்கை தட்டினார். உடனே மம்தா பேச்சை நிறுத்திவிட்டு வெளிநடப்பு செய்தார். அதன்பிறகும் மேற்கு வங்க அரசு அதிகாரிகள் கூட்டத்தில் இருந்தனர். கிராமங்களில் இருந்து வறுமை ஒழிப்பை தொடங்க வேண்டுமென கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்’’ என்றார்.

* முதல்வர்கள் புறக்கணிப்பு ஒன்றிய அரசே காரணம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டியில், ‘‘சில காரணங்களால் பல்வேறு மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அவர்களின் கவலைகள் நேர்மையானவை. அவர்கள் கூட்டத்தை புறக்கணித்ததற்கு ஒன்றிய பாஜ அரசு தான் காரணம். இந்தியா என்பதை மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசியலமைப்பு விவரிக்கிறது. அப்படி என்றால் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக கருதி, வரி, நிதியை சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் பாஜ அரசு அவ்வாறு செய்யவில்லை’’ என்றார்.

* மம்தா வெளிநடப்பு திட்டமிட்ட செயல்
பாஜ பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அளித்த பேட்டியில், ‘‘நம் நாட்டில் தலைப்பு செய்திககளில் இடம் பிடிப்பது மிகவும் எளிதானது. முதலில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் ஒரே எதிர்க்கட்சி தலைவர் நான் மட்டுமே என்றார். பின்னர் வெளியே வந்து மைக்கை அணைத்து புறக்கணித்து விட்டனர் என்றார். இன்று முழு நாளும் செய்தி டிவி சேனல்கள் மம்தாவுக்காக வேறெந்த வேலையும் செய்யவில்லை. இது திட்டமிட்ட செயல்’’ என்றார்.

பாஜவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியா கூறுகையில், ‘‘கூட்டத்தில் இருந்து மம்தா வெளிநடப்பு செய்தது திட்டமிட்டு கேமராக்களுக்காக நடத்தப்பட்டது’’ என்றார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘மம்தா கூறுவது எல்லாமே பொய். முதலில் அவர் உண்மையை பேசி பழக வேண்டும்’’ என்றார்.

* உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவான பிஐபி பேக்ட்செக் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மம்தா பானர்ஜியின் மைக் அணைக்கப்பட்டது என்பது தவறானது. ஒவ்வொரு பிரதிநிதி முன்பாகவும் அவருக்கு பேச வழங்கப்பட்ட நேரம் கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருக்கும். அது முடிந்ததும் மணி அடிக்கப்படாது. அதுபோல, அந்த கடிகாரம் அவர் பேசும் நேரம் முடிந்து விட்டதை மட்டுமே காட்டியது.

கூட்டத்தில் அகர வரிசைப்படி பேசுபவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, மம்தா பானர்ஜி மதிய உணவுக்குப் பிறகுதான் பேச வேண்டும். ஆனால் அவர் சீக்கிரமாக கொல்கத்தா திரும்ப வேண்டுமென மேற்கு வங்க அரசு தரப்பில் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 7வது நபராக பேசி உள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.

The post நிதி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் தடுத்ததால் மேற்கு வங்க முதல்வர் மம்தா வெளிநடப்பு: பிரதமர் மோடி முன்னிலையில் பரபரப்பு சம்பவம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamata ,Niti Aayog ,PM Modi ,New Delhi ,Mamata Banerjee ,Modi ,
× RELATED பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஜூனியர்...