×

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை ஒன்றிய அரசு திடீரென கலைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக சாட்டியுள்ளது. ஒன்றிய அரசுக்கு தேவையான தரவுகளை அளிப்பதற்காக பிரபல பொருளாதார நிபுணரும், இந்தியா புள்ளியியல் துறையின் முன்னாள் தலைமை நிபுணருமான திரோனவ் சென் தலைமையில் 14 உறுப்பினர்களை கொண்ட புல்லியலுக்கான நிலைக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.

குழு அமைக்கப்பட்டு 1 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நிலை குழு கலைக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழுவை கலைத்துள்ள ஒன்றிய புள்ளியியல் அமலாக்கத்துறை அமைச்சகம் குழுவின் உறுப்பினர்களுக்கே போதிய விளக்கத்தை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஒன்றிய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவானது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பை எடுப்பதுடன் புள்ளி விவரங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டுக்கான தேசிய உத்திகளை உருவாக்கும் பிரதான பணிகளை செய்து வந்தது.

இந்த சூழலில் 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்பட வில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி மட்டுமல்லாது, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பாஜகவின் கூட்டணி கட்சிகளே வலியுறுத்தி வருகின்றன. பாஜகவின் பாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திடீரென புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை எப்போது நடத்துவது என தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் குழு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் தள்ளிபோகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் 10 கோடி இந்தியர்களின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமை பெற்றால் தான் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜெயராம் ரமேஷ் இவை இரண்டையும் பாஜக அரசு விரும்பாததே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

The post மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Statistical Survey Committee ,Delhi ,Central Statistics and Census Committee ,Union Government ,BJP government ,India ,Statistical Survey Panel ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் செபி தலைவர் மாதபி மறுப்பு